கடனை திருப்பி தர மறுத்த பெண் கல்லால் தாக்கி கொலை - கள்ளக்காதலன் கைது
கடனை திருப்பி தர மறுத்த பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே கேளூர் சந்தைமேடு தஞ்சியம்மன் கோவில் செல்லும் வழியில் சாலையோரத்தில் நேற்று காலை ரத்தக்காயங்களுடன் பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சந்தவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் தரணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்து கிடந்தவர் விளக்கநந்தல் கிராமத்தை சேர்ந்த விஜயா (வயது 40) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் விஜயாவை அவரது கள்ளக்காதலன் சுப்பிரமணி கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விஜயாவின் கணவர் ஞானசேகரன், பால் வண்டி டிரைவர். இவர்களுக்கு சத்தியவாணி (20), ரோஜாநாயகி (16) ஆகிய 2 மகள்களும், நீலகண்டன் (13) என்ற மகனும் உள்ளனர். விஜயா கட்டிட வேலைக்கு சென்று வந்து உள்ளார். விஜயாவுக்கும், அவருடன் மேஸ்திரி வேலை செய்யும் ஆத்துவாம்பாடியை சேர்ந்த சுப்பிரமணி (30) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்து உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இளைய மகள் ரோஜாநாயகியை நர்சிங் பிரிவில் சேர்க்க சுப்பிரமணியிடம் ரூ.10 ஆயிரம் விஜயா கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சுப்பிரமணி, விஜயாவிடம் உனது மூத்த மகள் சத்தியவாணியை திருமணம் செய்து தர கேட்டுள்ளார். ஆனால் விஜயா, சத்தியவாணியை வேறு நபருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இதனால் விஜயாவுக்கும், சுப்பிரமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை மேஸ்திரி வேலை முடிந்து சுப்பிரமணி, விஜயாவை தனது மோட்டார் சைக்கிளில் கேளூர் சந்தைமேடு அருகே அழைத்து சென்று உள்ளார். அப்போது விஜயாவிடம், சுப்பிரமணி தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதற்கு விஜயா பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த சுப்பிரமணி அவரை கீழே தள்ளியுள்ளார். கீழே விழுந்த விஜயாவிற்கு காயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் விஜயாவை, சுப்பிரமணி கல்லால் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து போலீசார், மேஸ்திரி சுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story