கன்னியாகுமரியில் கடற்கரையை அழகுபடுத்தும் பணியை கலெக்டர் பார்வையிட்டார்


கன்னியாகுமரியில் கடற்கரையை அழகுபடுத்தும் பணியை கலெக்டர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 31 July 2019 4:30 AM IST (Updated: 31 July 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில், கடற்கரையை அழகுபடுத்தும் பணியை கலெக்டர் பிரசாந்த் வடநேரே பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி,

மத்திய அரசின் “சுவதேஷ் தர்சன்“ திட்டத்தின்கீழ், சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் பணிகள், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி, தெக்குறிச்சி, மணக்குடி ஆகிய கடலோர பகுதிகளில் அடிப்படை வசதிகள், அழகுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக, கடந்த 2016-ம் ஆண்டு ரூ.32 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது.

இதையடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு முதல் சுற்றுலா மேம்பாட்டு திட்ட பணிகள் நடந்து வந்தன. சர்வதேச அளவில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, இத்திட்டத்தின் கீழ் சுற்றுலா தகவல் மையம், இ-டாய்லெட், 2 இ-டிக்கெட் வழங்கும் மையம், முதலுதவி மையம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கடற்கரை சாலையில் சிலுவை நகரிலிருந்து “சன்செட் பாயிண்ட்“ வரை செல்லும் சாலை அழகுபடுத்துதல், 20 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இவற்றில் சுற்றுலா தகவல் மையம், சன்செட் பாயிண்ட் வரை செல்லும் சாலை அழகுபடுத்துதல் ஆகியவை ஜூலை மாதம் 31-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த பணிகள் இன்னும் முடிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.

கலெக்டர் பார்வையிட்டார்

இந்தநிலையில் குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று இந்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்காத அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தகாரரை கலெக்டர் கடுமையாக கண்டித்தார்.

ஆய்வின்போது குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் உதவிசெயற்பொறியாளர் சனல்குமார், குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி நெல்சன், கன்னியாகுமரி பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், உதவிபொறியாளர் இர்வின் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story