நாளை முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் அருள்பாலிக்கிறார்


நாளை முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் அருள்பாலிக்கிறார்
x
தினத்தந்தி 30 July 2019 11:00 PM GMT (Updated: 30 July 2019 8:29 PM GMT)

காஞ்சீபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க உள்ளார். இதற்கிடையே அத்திவரதர் தரிசன நெரிசலில் சிக்கி 25 பக்தர்கள் மயக்கம் அடைந்தனர்.

காஞ்சீபுரம்,

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 1-ந்தேதி முதல் அத்திவரதர் சயன (படுத்த நிலையில்) கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 30-வது நாளான நேற்று அத்திவரதர் முத்து கிரீடம், பூ கிரீடம், ராமர் நிற பட்டாடையுடன் காட்சியளித்தார்.

3 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர். அத்திவரதரை தரிசிக்க காத்திருந்த பக்தர்களில் 25 பேர் நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்தனர்.

அவர்களுக்கு அங்குள்ள முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பொது தரிசன வரிசையில் பக்தர்கள் 9 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்தனர். முக்கிய பிரமுகர்கள் 5½ மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை சயன கோலத்தில் (படுத்த நிலையில்) அருள்பாலித்து வரும் அத்திவரதர் நாளை (வியாழக்கிழமை) முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக இன்று (புதன் கிழமை) மதியம் 12 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு கோவில் உள்ளே வந்தவர்கள் மட்டும் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின்னர் அனுமதிக்கப்படமாட்டார்கள். நாளை அதிகாலை 5 மணியில் இருந்து அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-

பக்தர்களில் பெரும்பாலானோர் அத்திவரதரை தரிசித்த பிறகு சாப்பிடலாம் என்று வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் பலர் மயக்கம் அடைகின்றனர். அவ்வாறு இல்லாமல் சாப்பிட்டு விட்டு தரிசனம் செய்ய வாருங்கள். அத்திவரதர் தரிசனம் தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அத்திவரதர் தரிசன விழாவையொட்டி காஞ்சீபுரம் நகரில் உள்ள விடுதிகள் நிரம்பி காணப்படுகிறது. சில விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. ஆட்டோ கட்டணமும் அதிக அளவில் வசூலிக்கப்படுகிறது.

Next Story