கீழடி அகழ்வாராய்ச்சியில் புதிய செங்கல் கட்டிட சுவர்கள் கண்டுபிடிப்பு


கீழடி அகழ்வாராய்ச்சியில் புதிய செங்கல் கட்டிட சுவர்கள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 31 July 2019 4:45 AM IST (Updated: 31 July 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியின் போது புதிய செங்கல் கட்டிட சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே உள்ள கீழடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 5–வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கருப்பையா, முருகேசன் ஆகியோரது நிலங்களில் குழிகள் தோண்டப்பட்டு உள்ளது. இதில் சிறிய மண்பானை, பெரிய பானை உள்பட பல பொருட்களும், மேலும் இரட்டை சுவர் மற்றும் அதன் தொடர்ச்சியும் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் கூடுதலாக மாரியம்மாள், போதகுரு ஆகியோரின் நிலங்களிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வந்தது. இதில் பானை ஓடுகள், சிறிய கட்டிட சுவர் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு முருகேசன் என்பவரது இடத்தில் உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முருகேசன் இடத்தில் மேலும் குழிகள் தோண்டி ஆய்வு நடத்தியபோது, 3 புதிய செங்கல் கட்டிட சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செங்கல் கட்டிடம் சுமார் 5 அடி நீளமும், 4 அடி உயரமும் இருந்தது. இந்த சுவர் சிறிய செங்கற்களால் கட்டப்பட்டதாக இருந்தது. இதேபோல் இதற்கு அடுத்ததாக இருந்த குழியில் ஆய்வு செய்தபோது பண்டைய கட்டிட கலைக்கு உதாரணமாக அகலமான செங்கற்களால் ஆன சிறிய சுவரும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் அருகே போதகுரு என்பவரது நிலத்தில் சுமார் 12 அடி நீளம், 2 அடி அகலத்தில் புதிய செங்கல் சுவர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இங்குள்ள பகுதியில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்யும் போது கூடுதலாக செங்கல் சுவர்கள், கலை நயமிக்க பொருட்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story