கடலூர் மாவட்டத்தில் 148 பேர் புகார், நிதி நிறுவனம் நடத்தி ரூ.14 லட்சம் மோசடி - மேலாளர் கைது
கடலூர் மாவட்டத்தில் 148 பேர் புகார் கொடுத்ததை தொடர்ந்து நிதி நிறுவனம் நடத்தி ரூ.14 லட்சம் மோசடி செய்த வழக்கில் நிதி நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு ஒரு தனியார் நிதி நிறுவனம் கடலூர், காஞ்சீபுரம், திருப்பூர் ஆகிய பகுதிகளில் கிளைகள் அமைத்து இயங்கி வந்தது. இதன் நிர்வாக இயக்குனர்களாக திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை சேர்ந்த முத்துக்குமரன் உள்பட 8 பேர் இருந்து வருகின்றனர்.
பொதுமக்களிடம் இருந்து மாதாந்திர சேமிப்பு, நீண்டகால முதலீட்டு திட்டம், காப்பீடு, 6 ஆண்டுகளில் பணம் இரட்டிப்பாகும் திட்டம் போன்ற பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்து கோடிகணக்கில் பணம் வசூலித்துள்ளனர். ஆனால் அவர்கள் சொன்னது போன்று பணம் கட்டியவர்களுக்கு மீண்டும் பணத்தை முறையாக திருப்பி தரவில்லை என்று பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்தது.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 148 பேர், கடலூரில் உள்ள பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் குறிப்பிட்ட நிதி நிறுவனம் ரூ.14 லட்சம் மோசடி செய்து இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து நிதி நிறுவன இயக்குனர்களை பிடிக்க பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார். அதன்பேரில் கடலூர் மாவட்ட பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) நவநீதகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முரளி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல், போலீஸ்காரர்கள் மணிமொழி, பவானி ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசாரின் தேடுதல் வேட்டையில் நிதி நிறுவனத்தின் மேலாளர் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள தள்ளம்பாடி, இந்திராநகரை சேர்ந்த ராஜேஷ்(39) என்பவர் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர். நிர்வாக இயக்குனர்களை தொடர்ந்து வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறும்போது, தனியார் நிதி நிறுவனம் 4 மாவட்டங்களிலும் மொத்தம் ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது. எனவே இந்த நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்கலாம் என்றனர்.
Related Tags :
Next Story