பொள்ளாச்சியில், அ.தி.மு.க. பிரமுகர் வீடு, நகைக்கடைகள் உள்பட 9 இடங்களில் சோதனை - வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி


பொள்ளாச்சியில், அ.தி.மு.க. பிரமுகர் வீடு, நகைக்கடைகள் உள்பட 9 இடங்களில் சோதனை - வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி
x
தினத்தந்தி 30 July 2019 11:00 PM GMT (Updated: 30 July 2019 10:43 PM GMT)

பொள்ளாச்சியில் அ.தி.மு.க. பிரமுகர் வீடு, நகைக்கடைகள் உள்பட 9 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கடை வீதியில் செயல்பட்டு வரும் சின்ன அண்ணன் ஜூவல்லரி, கணபதி ஜூவல் சிட்டி ஆகிய நகைக்கடைகளில் விற்பனை அதிகமாக இருந்தும், வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில் பொள்ளாச்சிக்கு நேற்று 10-க்கும் மேற்பட்ட கார்களில் கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 40 பேர் வந்தனர்.காலை 10 மணிக்கு சின்ன அண்ணன் ஜூவல்லரி, கணபதி ஜூவல் சிட்டி கடைகள்கடை திறக்கும் போது ஒரு குழுவினர் வந்தனர். சின்ன அண்ணன் ஜூவல்லரி கடையின் கதவை பாதி திறந்த நிலையில் வைத்தும், கணபதி ஜூவல் சிட்டி கடையில் கண்ணாடி கதவுகளை மூடிக் கொண்டும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிமையாளர் மற்றும் வேலை பார்க்கும் ஊழியர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது.

நகை கடையில் தற்போது இருப்பு உள்ள நகைகளின் எடை குறித்தும், அதற்கான ஆவணங்கள் சரியாக உள்ளதா? என்பது குறித்தும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட நகைகள் மற்றும் அதற்கான ஆவணங்கள் குறித்தும் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது நகை கடைகளில் இருந்து சில முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது. வருமான வரித்துறை சோதனை காரணமாக நகை கடைகளுக்கு வந்த வாடிக்கையாளர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். மேலும் ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. பொள்ளாச்சியில் பிரபலமான நகை கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி காமராஜர் வீதியில் உள்ள அ.தி.மு.க. பிரமுகர் ஈஸ்வரமூர்த்தி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது வீட்டில் இருந்தவர்களின் செல்போன் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. மேலும் வீட்டின் நுழைவு வாயில் கதவை பூட்டிக் கொண்டு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் கணக்கில் வராத பணம், நகைகள் உள்ளதா? என்று சோதனை நடத்தப்பட்டது. ஈஸ்வரமூர்த்தி ரியஸ் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க.வில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை உடுமலை ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக அவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதேபோன்று பொள்ளாச்சி மகாலிங்புரத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவரது வீடு, எண்ணெய் நிறுவனம் மற்றும் அவரது கல்வி நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மேலும் நெகமம் அருகே உள்ள ரங்கம்புதூரில் சின்னச்சாமி என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை மற்றும் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

மூட்டாம்பாளையம், ஏரிப்பட்டியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பொள்ளாச்சி, நெகமம் பகுதியில் மட்டும் நேற்று ஒரே நேரத்தில் 9 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. வருமான வரித்துறை சோதனை காரணமாக பொள்ளாச்சியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.


Next Story