கூடலூர் அருகே, அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்து பெண் உதவியாளருக்கு கத்திக்குத்து - மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு
கூடலூர் அருகே அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்து பெண் உதவியாளரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கூடலூர்,
கூடலூர் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி புளோரிடா மேரி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பன்னீர்செல்வம் இறந்து விட்டார். இதையொட்டி அவரின் மனைவி புளோரிடா மேரி (வயது 45) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அங்கன்வாடி மைய பெண் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். தற்போது ஸ்ரீமதுரை ஊராட்சி போஸ்பாரா அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் அங்கன்வாடி மையத்துக்கு புளோரிடா மேரி பணிக்கு சென்றார். தொடர்ந்து மையத்தில் அலுவலக பணிகளை மேற்கொண்டிருந்தார். பகல் 12.30 மணிக்கு குழந்தைகள் உணவு அருந்தி விட்டு மையத்தின் வெளியே நின்றிருந்தனர்.
அப்போது மர்ம நபர் ஒருவர் அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்து புளோரிடா மேரியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அங்கன்வாடி ஊழியர் வலி தாங்கமுடியாமல் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கன்வாடி மையத்துக்கு ஒடிவந்தனர். பொதுமக்கள் வருவதை கண்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
உடனடியாக இதுகுறித்து பொதுமக்கள் கூடலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் படுகாயம் அடைந்த புளோரிடா மேரியை சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் சுல்தான்பத்தேரி தனியார் ஆஸ்பத்திரிக்கு புளோரிடா மேரி கொண்டு செல்லப்பட்டார்.
இதனிடையே கூடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் படுகாயம் அடைந்த புளோரிடா மேரியிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்து அடையாளம் கத்தியால் குத்திவிட்டதாக தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து கூடலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சதிஷ், பிரகாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை வலைவீசி தேடிவருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த அங்கன்வாடி மையத்தை கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் நேரில் சென்று பார்வையிட்டார்.
அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்து பெண் உதவியாளரை மர்ம நபர் கத்தியால் குத்திய சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story