மாவட்ட செய்திகள்

பந்தலூர் அருகே, காட்டு யானை தாக்கி தொழிலாளி சாவு + "||" + Near Bandalur, Wild elephant attack worker dies

பந்தலூர் அருகே, காட்டு யானை தாக்கி தொழிலாளி சாவு

பந்தலூர் அருகே, காட்டு யானை தாக்கி தொழிலாளி சாவு
பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் தோட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பந்தலூர்,

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் மேற்கு பிரிவை சேர்ந்த தோட்ட தொழிலாளி கருப்பையா (வயது 52). இவர் குடும்பத்துடன் அதே பகுதியில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் குடியிருப்பு மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் குடியிருப்பை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக குடும்பத்தினருடன் அருகே உள்ள மற்றொரு குடியிருப்பில் தற்காலிகமாக கருப்பையா வசித்து வந்தார்

நேற்று அதிகாலை 4½ மணிக்கு தூங்கி எழுந்த கருப்பையா, இயற்கை உபாதையை கழிப்பதற்காக சீரமைப்பு பணி நடைபெற்று வரும் குடியிருப்பில் உள்ள கழிப்பறைக்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் வெளியே வந்த அவர் குடும்பத்தினர் தங்கி உள்ள அறைக்கு நடந்து வந்தார். அப்போது தெருவிளக்குகள் இல்லாததால் நன்கு இருட்டாக இருந்தது. இதனால் கருப்பையா இருளில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை திடீரென தொழிலாளியை விரட்டியது.

இதை சற்றும் எதிர்பாராத அவர் அலறி அடித்தவாறு ஓடினார். ஆனாலும் காட்டு யானை தொடர்ந்து அவரை விரட்டி வந்து தும்பிக்கையால் பிடித்து தாக்கியது. மேலும் காலால் மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கருப்பையா துடிதுடித்து இறந்தார். இதற்கிடையே கருப்பையாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி செல்வி மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் காட்டு யானையும் அங்கிருந்து சென்றது.

அப்போது சிதைந்த நிலையில் கிடந்த கருப்பையாவின் உடலை கண்டு அவரது மனைவி கதறி அழுதார். மேலும் காட்டு யானையால் சக தொழிலாளி உயிரிழந்ததை கண்ட தொழிலாளர் குடும்பத்தினர் கண்கலங்கினர். இந்த நிலையில் தகவல் அறிந்த தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் தேவாலா வனச்சரகர்கள் சரவணன், கணேசன், வன காப்பாளர் லூயீஸ் உள்பட போலீசார், வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதனிடையே இறந்த கருப்பையாவின் மனைவியிடம் வனத்துறை சார்பில் இழப்பீட்டு தொகை முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. இதனை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வனச்சரகர்கள் சரவணன், கணேசன் ஆகியோர் வழங்கினர். காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பந்தலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட நெல்லிக்குன்னு பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை வந்தது. மேலும் பொதுமக்களை விரட்டியது. அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜெயா (45), கண்ணன் (28) ஆகியோர் பயத்தில் ஓடினர். இதில் 2 பேரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காட்டு யானையை துரத்தினர். தொடர்ந்து காயம் அடைந்த ஜெயா, கண்ணனை கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஜெயா மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.