இயற்கையாக தயாராகும் உப்பால் மக்களுக்கு பாதிப்பு இல்லை எனக்கூறி அயோடின் கலந்த உப்பு விற்பனைக்கு எதிராக வழக்கு; ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றி தனி நீதிபதி உத்தரவு
இயற்கையான முறையில் தயாராகும் உப்பால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், அயோடின் கலந்த உப்பு விற்பனைக்கு எதிராகவும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
மதுரை,
தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்க செயலாளர் ஜெயபாலன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
தூத்துக்குடி உப்பளங்களில் இயற்கை முறையில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். இந்தநிலையில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஒழுங்கு முறை விதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 31–ந்தேதி திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்த திருத்தத்தில், சாதாரண உப்பை யாரும் விற்கக்கூடாது. அயோடின் கலந்த உப்பைதான் விற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இயற்கையான உப்பை பறிமுதல் செய்து, உப்பு வியாபாரிகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் மிரட்டி வருகின்றனர். பல ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் மீதான அதிகாரிகளின் இந்த நடவடிக்கை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு 150 மில்லி கிராம் அயோடின் தேவை என அறிவியல் ஆய்வு கூறுகிறது. இதன் அடிப்படையில் அயோடினை இயற்கையான உப்புடன் கலந்து கொடுத்துவிடலாம் என்ற அடிப்படையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இயற்கை உப்பை பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இதுவரை ஏற்பட்டது இல்லை. அயோடினை வேறு வகையில் மக்களுக்கு அளிக்க ஏற்பாடு செய்யலாம்.
எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஒழுங்குமுறை விதியில் திருத்தம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். நாங்கள் இயற்கையாக உற்பத்தி செய்யும் உப்பை விற்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, “மனுதாரரின் கோரிக்கை குறித்து தனி நீதிபதி எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. எனவே இந்த வழக்கை டிவிஷன் பெஞ்ச் விசாரிக்க பரிந்துரைக்கப்படுகிறது“ என்று நீதிபதி உத்தரவிட்டார்.