கிருஷ்ணகிரி அருகே துணிகரம்: 2 கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு


கிருஷ்ணகிரி அருகே துணிகரம்: 2 கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 31 July 2019 4:50 AM IST (Updated: 31 July 2019 4:50 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே 2 கோவில்களில் உண்டியல்களை மர்ம நபர்கள் உடைத்து பணத்தை திருடிச்சென்றனர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குருபரப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகே கம்மம்பள்ளி கொட்டாவூர் தோப்பு பகுதியில் சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. மேலும் அந்த பகுதியில் விநாயகர் கோவிலும் உள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல பூஜைகள் நடைபெற்றது. இரவு பூசாரிகள் கோவிலை பூட்டிச் சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை பூஜைக்காக வந்த போது சென்றாய பெருமாள் கோவிலில் 2 உண்டியல்களும், விநாயகர் கோவிலில் ஒரு உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரிகள் இது குறித்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கொள்ளை நடந்த கோவில்களுக்கு விரைந்து வந்தனர்.

மேலும் இது குறித்து மகராஜகடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இரவு கோவிலை பூட்டியதை அறிந்த மர்ம நபர்கள் அங்கு வந்து கோவிலின் கதவை திறந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக மகராஜகடை போலீசார் விசாரித்து, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story