வேலூர் தொகுதியின் வெற்றி மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவதற்கான முன்னோட்டம் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
வேலூர் தொகுதியின் வெற்றி மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவதற்கான முன்னோட்டம் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
ஆம்பூர்,
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்துக்கு ஆதரவாக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று ஆம்பூர் அருகே பேரணாம்பட்டு ஒன்றியம், சின்னவரிகம் ஊராட்சி பகுதியில் பெண்கள், பொதுமக்களிடம் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு ஆகஸ்டு 5-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. நீங்கள் தி.மு.க.விற்கு வாக்களிக்க தயாராகி விட்டீர்கள். தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.
இந்தியா முழுவதும் பிரதமர் மோடியை ஏற்றுக்கொண்டாலும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழகத்தில் முதல் -அமைச்சர் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. மோடியின் அடிமை என்று சொன்னால்தான் தெரியும். அந்தளவுக்கு தமிழகத்தில் 2 பேர் அடிமைகளாக உள்ளனர்.
வேலூர் தொகுதியில் தி.மு.க.வின் வெற்றியை தள்ளி போடத்தான் முடிந்தது. தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடை போடவோ, தடுக்கவோ முடியாது. வேலூர் தொகுதி வெற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சர் ஆவதற்கான முன்னோட்டமாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது வேட்பாளர் கதிர்ஆனந்த், நந்தகுமார் எம்.எல்.ஏ., காத்தவராயன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் எம்.டி.சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனைதொடர்ந்து பேரணாம்பட்டு நகரத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் பிரதமர் மோடியின் தயவால், அவரது கண்அசைவால் ஆட்சி நடக்கிறது. விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் வரும். மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக காத்திருக்கிறார்கள் என்றார்.
இதில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, நகர செயலாளர் ஆலியார் ஜூபேர் அகமது, ஒன்றிய செயலாளர் பொகளூர் ஜனார்த்தனன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடியாத்தம் நகரில் பிரசாரம் மேற்கொண்டார். குடியாத்தம் தென்குளக்கரை பகுதியில் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:-
குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் காத்தவராயனை வெற்றி பெற செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது வேலூர் தொகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்கினேன். தற்போது மாநில இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் உங்களிடம் தி.மு.க.விற்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன்.
வேலூரில் தேர்தல் நடந்திருந்தால் கதிர்ஆனந்த் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பார். ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி தலைவர் கருணாநிதி நம்மைவிட்டு பிரிந்து சென்ற முதலாம் ஆண்டு நினைவு தினம். வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வெற்றியை அவருக்கு காணிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து குடியாத்தம் ஒன்றியம் வளத்தூர் ஊராட்சியில் கிராம மக்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார். அப்போது கிராமமக்கள் குடிநீர் இல்லை. பஸ் வசதி இல்லை, முதியோர் உதவித்தொகை வழங்கப்படவில்லை என தெரிவித்தனர். அதற்கு பதிலளித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், விரைவில் மு.க.ஸ்டாலினை முதல்- அமைச்சர் நாற்காலியில் மக்கள் அமர்த்துவார்கள். அப்போது பொதுமக்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்படும் என்றார்.
அப்போது வேட்பாளர் கதிர்ஆனந்த், தொகுதி பொறுப்பாளர் தா.மோ.அன்பரசன், மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., குடியாத்தம் எம்.எல்.ஏ. காத்தவராயன், நகர பொறுப்பாளர் சவுந்தர்ராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் நத்தம் பிரதீஷ், ஏ.என்.விஜயகுமார், அரசு, மனோஜ், நவீன்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் உதயநிதி ஸ்டாலின் கே.வி.குப்பம் ஊராட்சியில் பிரசாரம் செய்தார்.
Related Tags :
Next Story