ஆடி-18 பண்டிகைக்கு மேட்டூர் அணையில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் - பக்தர்கள் கோரிக்கை


ஆடி-18 பண்டிகைக்கு மேட்டூர் அணையில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் - பக்தர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 31 July 2019 5:20 AM IST (Updated: 31 July 2019 5:20 AM IST)
t-max-icont-min-icon

ஆடி-18 பண்டிகைக்கு மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பரமத்திவேலூர்,

ஆடி-18 பண்டிகையின்போது பரமத்தி வேலூர் காவிரியாற்றில் பரிசல் போட்டி, மோட்சதீபம் மற்றும் பாரம்பரியமாக வழிபாடு நடத்தி வரும் கோவில் ஆயுதங்களை சுத்தம் செய்து, தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிகழ்ச்சிக்காக நாமக்கல், சேலம் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்வார்கள். மேலும் புதுமண தம்பதியினர் ஆடி-18 அன்று அதிகாலை முதலே காவிரியில் நீராடி, காவிரி தாயை வணங்கி மஞ்சள் கயிறு கட்டிக்கொள்வர். மேலும் கன்னி தெய்வங்களுக்கு பூஜைகள் செய்து கன்னி பெண்களுக்கு புத்தாடைகள் வழங்கி வழிபடுவது வழக்கம்.

மேலும் ஆடி-18 அன்று மாலையில் மீனவர் சங்கம் மூலம் நடத்தப்படும் பரிசல் போட்டியை பார்ப்பதற்காகவும், நாடு நலம் பெறவும், விவசாயம் பெருகவும், நல்ல மழை பெய்யவும், சுபிட்சம் பெறவும் காவிரியில் விடப்படும் மோட்ச தீபத்தை காண்பதற்கும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்து பார்த்து வணங்கி செல்வர்.

இந்நிலையில் தற்போது காவிரியாற்றில் குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டுமே ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆறு வறண்டு போய், ஓடைபோல் காட்சியளிக்கிறது. இந்தநிலை ஆடி-18 வரை நீடித்தால் பரிசல் போட்டியும், மோட்ச தீபத்தையும் விட முடியாத சூழ்நிலை ஏற்படும். தற்போது மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஆடி-18 பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story