வானவில் : தண்ணீரை சோதிக்கும் கருவி


வானவில் : தண்ணீரை சோதிக்கும் கருவி
x
தினத்தந்தி 31 July 2019 5:47 PM IST (Updated: 31 July 2019 5:47 PM IST)
t-max-icont-min-icon

பெரும்பாலான நோய்களுக்கு காரணமே தண்ணீர்தான்.

நாம் தினசரி குடிக்கும் நீரால் அதிக அளவு நோய்கள் பரவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீர் பஞ்சம் நிலவுவதால், சுத்தமான தண்ணீரை தேடி அலைய வேண்டியிருக்கிறது. நீங்கள் குடிக்கும் தண்ணீர் சுத்தமானது, சுகாதாரமானதா என்பதை அறியும் கருவியை (டெஸ்டர்) அறிமுகம் செய்துள்ளது ஜியோமி. இது துருப்பிடிக்காத தன்மை கொண்டது. தண்ணீரின் தூய்மை அளவு இதன் மேல் பாகத்திலுள்ள எல்.இ.டி. திரையில் ஒளிரும். ஒரு சில வினாடிகளில் தண்ணீரின் தூய்மைத் தன்மையை இது உணர்த்திவிடும். குடிப்பதற்கு, சமையலுக்கு, குளியலுக்கு நீங்கள் எந்த அளவுக்கு கடினமான (உலோகக் கலப்பு நிறைந்த) தண்ணீரை பயன்படுத்துகிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும். கால்சியம், மக்னீசியம், அம்மோனியம் அசிடேட், சோடியம் போன்ற தனிமங்கள் எந்த அளவுக்கு இதில் கலந்துள்ளது என்பதை உணர முடியும்.

இது தவிர கடின உலோக அயனிகளான குரோமியம், துத்தநாகம், ஈயம், தாமிரம் போன்ற கனிமம் கலந்திருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். 80 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையை தாங்கி செயல்படும் தன்மை கொண்டது. இதில் எல்.ஆர்44 ரக பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதை எளிதில் மாற்ற முடியும். 2 நிமிடம் செயல்படாவிட்டால் இதுதானாகவே அணைந்து பேட்டரியை சேமிக்கும். முதல் 5000 டெஸ்டர்கள் ரூ.349 விலையில் விற்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பிறகு இதன் விலை ரூ.499 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஆகஸ்டு 25 முதல் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story