தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு: குமரியில் 400 தனியார் ஆஸ்பத்திரிகள் அடைப்பு


தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு: குமரியில் 400 தனியார் ஆஸ்பத்திரிகள் அடைப்பு
x
தினத்தந்தி 31 July 2019 11:00 PM GMT (Updated: 31 July 2019 3:23 PM GMT)

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்டத்தில் 400 தனியார் ஆஸ்பத்திரிகள் அடைக்கப்பட்டன. மேலும் மாணவ– மாணவிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்,


தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால் இந்த ஆணையத்துக்கு நாடு முழுவதும் டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் தங்களது எதிர்ப்பை காட்டும் விதமாக பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நேற்று தனியார் ஆஸ்பத்திரிகள் அடைப்பு போராட்டம் நடந்தது. இதே போல் குமரி மாவட்டத்திலும் தனியார் ஆஸ்பத்திரிகள் நேற்று காலை 6 மணி முதல் அடைக்கப்பட்டு இருந்தன.


இதுபற்றி இந்திய மருத்துவர் சங்க நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிராக பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகிறோம். ஆனால் இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அடுத்த கட்டமாக தனியார் ஆஸ்பத்திரி அடைப்பு போராட்டம் நடத்தி உள்ளோம். குமரி மாவட்டத்தில் எங்களது சங்கத்தின் கீழ் சுமார் 400 தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளன. இவை அனைத்து நேற்று செயல்படவில்லை. அடைக்கப்பட்டு இருந்தன. இனியும் எங்களது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை எனில் மேலும் போராட்டங்கள் நடத்தப்படும்“ என்றார்.

தனியார் ஆஸ்பத்திரிகள் அடைக்கப்பட்டு இருந்தாலும், ஏற்கனவே உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களுக்கு வழக்கமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளிட்டவை வழக்கம் போல செயல்பட்டன.


 தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவ–மாணவிகள் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

 மேலும் மருத்துவ கல்வியில் “நெக்ஸ்ட்“ தேர்வை புகுந்த கூடாது, இணைப்பு படிப்புகளை கொண்டு வரகூடாது, இந்திய மருத்துவ கழகத்தை ஒழிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் மனித சங்கிலி போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டன.

போராட்டமானது ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி மாணவர் பேரவை தலைவர் யாதவ் தலைமை தாங்கினார். ஏராளமான மாணவ–மாணவிகள் பங்கேற்று ஒருவருக்கு ஒருவர் கைகளை கோர்த்தபடி நீண்ட தூரம் அணிவகுத்து நின்றனர்.

 மனித சங்கிலி போராட்டம் காரணமாக ஆஸ்பத்திரி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மருத்துவ மாணவ–மாணவிகள் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 29–ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story