மதுரையில் கட்டிட வரைபட அனுமதி வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் கைது
கட்டிட வரைபட அனுமதி வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மாமியார் மஞ்சுளாவிற்கு காதக்கிணறு பகுதியில் ஒரு இடம் உள்ளது. அந்த இடத்தில் ஜெகதீசன் வீடு கட்ட முடிவு செய்தார். அதற்கான வரைபட அனுமதி பெறுவதற்காக மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.
நீண்ட நாட்களாகியும் வரைபட அனுமதி வழங்கப்படாமல் அலுவலகத்தில் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் அவர் ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று விசாரித்தார். அப்போது அங்கிருந்த அலுவலக உதவியாளர் ராமநாதன் என்பவர், ரூ.12 ஆயிரம் கொடுத்தால் தான் வரைபட அனுமதி கிடைக்கும் என்று தெரிவித்தார். பின்னர் அவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக முடிவு செய்தனர்.
அலுவலகத்திற்கு பலமுறை அலைய வைத்ததுடன், லஞ்சம் கொடுத்தால் தான் வரைபட அனுமதி கிடைக்கும் என்று கூறியது ஜெகதீசனை ஆத்திரம் அடைய செய்தது.
இதையடுத்து லஞ்சம் கேட்டது குறித்து மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் நிலையத்தில் ஜெகதீசன் புகார் செய்தார். போலீசார் அதுகுறித்து விசாரணை நடத்தினர். பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையிலான போலீசார் ஜெகதீசனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.
அந்த பணத்தை ஜெகதீசன் நேற்று மதியம் ஒன்றிய அலுவலகத்திற்கு எடுத்துச்சென்று உதவியாளர் ராமநாதனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ராமநாதனை கையும், களவுமாக கைது செய்தனர். பிடிபட்ட அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.