நெக்ஸ்ட் மருத்துவ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மனித சங்கிலி


நெக்ஸ்ட் மருத்துவ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மனித சங்கிலி
x
தினத்தந்தி 31 July 2019 11:00 PM GMT (Updated: 31 July 2019 5:27 PM GMT)

நெக்ஸ்ட் மருத்துவ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் 5 ஆண்டுகள் மருத்துவ படிப்பை முடித்த பின்னர் நெக்ஸ்ட் எனப்படும் மருத்துவ தேர்வை எழுதினால் மட்டுமே இந்திய மருத்துவ கழகத்தால் டாக்டராக அங்கீகரிக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய மருத்துவ ஆணையத்தை கண்டித்தும் மருத்துவ கல்லூரிகளில் படித்து வரும் மருத்துவ மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மனித சங்கிலி

இந்தநிலையில் நேற்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பிரிட்ஜ் கோர்ஸ் எனப்படும் வேறு துறையை சார்ந்தவர்கள் 6 மாத காலம் மருத்துவ படிப்பை படித்தால் டாக்டர் ஆகலாம் என்ற புதிய நடைமுறையால் மருத்துவத்தின் தரம் குறைந்து விடும். எனவே இந்த நடைமுறைகளை கைவிட வேண்டும் என்்்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

வேலைநிறுத்தம்

இதேபோல் மருத்துவ மாணவர்களுக்கும், மருத்துவத்துறை மற்றும் பாமர மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்திய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து இந்திய மருத்துவ கழகம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதனால் திருவாரூர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் 48 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் படாததால் பாதிக்கப்பட்டனர்.

Next Story