கெலவரப்பள்ளி அணையில் உற்சாக குளியல்: யானைகள் தாக்கி வனக்காவலர் படுகாயம் விரட்டும் பணியின் போது சம்பவம்
ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையில் உற்சாக குளியல் போட்ட 2 காட்டு யானைகளை விரட்டும் பணியின் போது யானைகள் தாக்கியதில் வனக்காவலர் படுகாயம் அடைந்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் நீண்ட நாட்களாக சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள் இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்கு விவசாய நிலங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள தக்காளி, முட்டைக்கோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் தொடர்ந்து நாசம் செய்து வருகின்றன.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த 2 யானைகளும் பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து ஆலூர் தின்னூர், தட்டிகானபள்ளி, முத்தாளி வழியாக சென்று ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே உள்ள தைலத்தோப்பில் புகுந்தன. இதன் காரணமாக அப்பகுதி மக்களும், விவசாயிகளும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், இந்த யானைகளை பேரண்டப்பள்ளி வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் நேற்று 2 காட்டு யானைகளும், தைலத்தோப்பில் இருந்து வெளியே வந்தன. பின்னர் அவைகள் அருகில் உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு சென்றன. தொடர்ந்து அணையில் இறங்கி 2 யானைகளும் உற்சாக குளியல் போட்டன. இதையொட்டி அவைகள் துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சி ஒன்றன் மீது ஒன்று அடித்து விளையாடின.
இதைப் பார்க்க அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். இதைத் தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் 2 யானைகளையும் மீண்டும் பேரண்டப்பள்ளி காட்டுக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென ஆக்ரோஷத்துடன் வந்த 2 யானைகளும் வனத்துறையினரை விரட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதில், வனக்காவலர் பசவராஜ் (வயது 32) என்பவரை யானைகள் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை, வனத்துறையினர் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பசவராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே வனத்துறையினர் அந்த 2 யானைகளையும் பேரண்டப்பள்ளி வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.
Related Tags :
Next Story