முதுமலை சாலையோரங்களில், வனவிலங்குகளுக்கு உணவு பொருட்களை வழங்கினால் கடும் நடவடிக்கை


முதுமலை சாலையோரங்களில், வனவிலங்குகளுக்கு உணவு பொருட்களை வழங்கினால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 31 July 2019 10:45 PM GMT (Updated: 31 July 2019 5:53 PM GMT)

முதுமலை சாலையோரங்களில் வனவிலங்குகளுக்கு உணவு பொருட்களை வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் மற்றும் முதுமலை வனப்பகுதியில் காட்டுயானைகள், புலிகள், கரடிகள், செந்நாய்கள், காட்டெருமைகள், சிறுத்தைப்புலிகள், மான்கள், கருஞ்சிறுத்தைப்புலிகள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை கண்டு ரசிப்பதற்காக வனத்துறை சார்பில் காலை மற்றும் மாலை நேரத்தில் வாகன வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் கூடலூரில் இருந்து மைசூருவுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முதுமலை உள்ளது. மேலும் முதுமலையில் இருந்து மசினகுடி வழியாக ஊட்டிக்கு ஆபத்தான மலைப்பாதையும் செல்கிறது. முதுமலை புலிகள் காப்பகம் வழியாக செல்வதால் வனவிலங்குகளும் அடிக்கடி மேற்கண்ட சாலைகளை கடப்பது வழக்கம். இதனை சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி ரசித்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் திடீரென தாக்கும் தன்மை உடையவை என்பதால் வனப்பகுதிக்குள் வாகனங்களை நிறுத்தக்கூடாது என வனத்துறையினர் உத்தரவிட்டு உள்ளனர். இருப்பினும் மான்கள், குரங்குகள், மயில்கள் உள்ளிட்டவை சாலையோரம் அதிகளவு வருகின்றன. இந்த சமயத்தில் சமவெளி பிரதேசங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வ மிகுதியால் மான்கள், குரங்கள், மயில்களுக்கு தாங்கள் கொண்டு வந்த உணவு பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இதனால் சுற்றுலா பயணிகளை எதிர்பார்த்து அவைகளும் சாலையோரம் வந்து நிற்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக மான்கள், குரங்குகள் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அருகே சென்று எட்டி பார்க்கும் நிலையை காண முடிகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

வனவிலங்குகளுக்கு உணவு பொருட்களை வழங்குவது வனச்சட்டப்படி குற்றமாகும். மேலும் இடையூறு செய்தல், வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்துதல் கூடாது என புலிகள் காப்பக சாலைகளின் முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகைகள் பொருத்தப்பட்டு உள்ளது. இதை சுற்றுலா பயணிகள் பொருட்படுத்துவது இல்லை. ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு வனப்பகுதி மற்றும் வனவிலங்குகளிடம் அத்துமீறும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளுக்கு உணவு பொருட்களை கட்டாயம் கொடுக்கக்கூடாது. அவ்வாறு வழங்குவதால் வனவிலங்குகள் இயற்கை உணவு தேடுவதை தவிர்த்து சாலையோரம் பொதுமக்களின் உணவு பொருட்களுக்கு எதிர்பார்த்து பழகி விடுகிறது. எனவே உணவு பொருட்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் எச்சரித்து உள்ளனர்.

Next Story