பாலியல் குற்றச்சாட்டை தீவிரமாக அணுகாமல் போலீஸ்காரருக்கு சிறிய தண்டனை வழங்கியது எந்திரத்தனமானது - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கடும் அதிருப்தி


பாலியல் குற்றச்சாட்டை தீவிரமாக அணுகாமல் போலீஸ்காரருக்கு சிறிய தண்டனை வழங்கியது எந்திரத்தனமானது - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கடும் அதிருப்தி
x
தினத்தந்தி 31 July 2019 11:00 PM GMT (Updated: 31 July 2019 6:45 PM GMT)

பாலியல் குற்ற வழக்கில் குற்றச்சாட்டை தீவிரமாக அணுகாமல் போலீஸ்காரருக்கு சிறிய தண்டனை வழங்கியது எந்திரத்தனமானது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

மதுரை,

திண்டுக்கல்லை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் திண்டுக்கல் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றினார். இவர் மீது ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2012–ம் ஆண்டில் பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் காரணமாக அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றச்சாட்டு குறிப்பாணை அளிக்கப்பட்டது.

அதில், ‘அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ஆயுதப்படை காவலர் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்‘ என கூறப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக விசாரணை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்தார்.

அதன் அடிப்படையில் கருப்பசாமிக்கு 3 ஆண்டுக்கு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து தண்டனை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த தனி நீதிபதி, கருப்பசாமிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தார். இதனை எதிர்த்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சார்பில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி., திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர். முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த அதிரடி உத்தரவு வருமாறு:–

ஒழுக்கம் நிறைந்த காவல் துறையில் பணியாற்றிய போலீஸ்காரர் கருப்பசாமி மீதான பாலியல் குற்றச்சாட்டின் மீதான விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவருக்கு 3 ஆண்டுக்கான ஊதிய உயர்வை மட்டும் நிறுத்தி வைத்து சிறிய அளவிலான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள், இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டை தீவிரமாக அணுகாமல் எந்திரத்தனமாக செயல்பட்டு இருப்பது நீதித்துறைக்கு பெரும் அதிர்ச்சியை தருகிறது. மனுதாரருக்கு குறைந்தபட்ச தண்டனை ஏன் வழங்கப்பட்டது என்பதற்கு அந்த உத்தரவில் எந்த காரணங்களும் கூறப்படவில்லை.

அதற்கான காரணங்களை ஆராயாமல் இந்த சிறிய தண்டனையையே மேல்முறையீட்டு அதிகாரியும், மறுசீராய்வு அதிகாரியும் உறுதி செய்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற கடுமையான குற்றத்திற்கு குறைவான தண்டனை வழங்கியதற்கு நீதிமன்றம் கடும் அதிருப்தியை பதிவு செய்கிறது.

தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும், தொடக்க நிலையிலேயே கோர்ட்டு முடிவெடுத்ததை ஏற்க இயலாது. இதற்காக தனி நீதிபதி கூறும் காரணங்களும் ஏற்புடையதல்ல. எனவே தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இந்த வழக்கில் மனுதாரருக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச தண்டனையை மறுபரிசீலனை செய்து வழக்கை மீண்டும் சட்டப்படி விசாரித்து, குற்றத்துக்கு ஏற்ற உரிய தண்டனையை வழங்குவதற்காக டி.ஜி.பி.க்கு இந்த வழக்கு திருப்பி அனுப்பப்படுகிறது.

புதிய உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு வசதியாக டி.ஜி.பி. ஏற்கனவே கடந்த 2016–ம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story