பசுந்தீவன அபிவிருத்தி திட்டத்தில் மானியத்துக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு கால்நடை வளர்ப்போர் முன்பதிவு செய்ய கலெக்டர் அழைப்பு


பசுந்தீவன அபிவிருத்தி திட்டத்தில் மானியத்துக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு கால்நடை வளர்ப்போர் முன்பதிவு செய்ய கலெக்டர் அழைப்பு
x
தினத்தந்தி 31 July 2019 10:45 PM GMT (Updated: 31 July 2019 7:04 PM GMT)

பசுந்தீவன அபிவிருத்தி திட்டத்தில் மானியத்துக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போர் இந்த திட்டத்தில் பயன்பெற முன்பதிவு செய்யுமாறு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

தஞ்சாவூர்,

பசுந்தீவன அபிவிருத்தி திட்டம் 2019-20-ம் ஆண்டிற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து மாநிலம் முழுவதும் செயல்படுத்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க பசுந்தீவன அபிவிருத்தி திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

தஞ்சை மாவட்டத்தில் கறவை மாடுகளில் உற்பத்தி திறன், பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மாநில பசுந்தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அதிக விளைச்சல் தரக்கூடிய கோ-4 மற்றும் கோ-5 ரக கம்பு, பசுந்தீவனங்களை கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தங்களது நிலத்தில் வளர்க்க விதைகள் வழங்கப்படும்.

வேலி மசால்தீவன பயிர்களை வளர்க்க 1.5 சென்டிற்கு 120 கிராம் விதைகளும், மக்காச்சோள பயிர்கள் வளர்க்க 1 சென்டிற்கு 3 பருவத்திற்கு 480 கிராம் விதைகள், தட்டைப்பயிர் வளர்க்க 1.5 சென்டிற்கு 4 பருவத்திற்கு 480 கிராம் விதைகள், ஊடு பயிராக 2 மீட்டர் இடைவெளியில் புல் வளர்க்க 100 கிராம் விதைகள் ஆகியவை கொள்முதல் செய்ய 100 சதவீதம் மானியமாக 10 சென்டிற்கு 500 ரூபாய் வீதம் வழங்க 50 ஏக்கர் தேர்வு செய்யப்பட உள்ளது.

மானாவாரி நிலப்பகுதியில் தீவன சோளம் மற்றும் தட்டைப்பயிறு வளர்க்கும் திட்டத்திற்கு 150 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்ய ஒவ்வொரு கால் ஏக்கருக்கும் சாகுபடி செய்ய தேவைப்படும் 3 கிலோ தரமான சோள விதையும், 1 கிலோ தட்டைப்பயிறு விதையும் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.

இந்த திட்டங்களில் பயன்பெற விரும்பும் கால்நடை வளர்ப்போர் தங்களது பகுதியில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுகி தங்களது பெயரை வருகிற 10-ந் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்த வருக்கு முன்னுரிமை அடிப் படையில் மட்டுமே மானியம் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story