மோடி அரசுக்கு எதிராக வருகிற 6-ந்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன இயக்கம் கே.பாலகிருஷ்ணன் பேட்டி


மோடி அரசுக்கு எதிராக வருகிற 6-ந்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன இயக்கம் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 31 July 2019 11:00 PM GMT (Updated: 31 July 2019 7:26 PM GMT)

மோடி அரசுக்கு எதிராக வருகிற 6-ந்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன இயக்கம் நடத்தப்படும் என்று, அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

பெரம்பலூர்,

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நேற்று மாலை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புதிய கல்வி கொள்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மசோதாவை அவசர, அவசரமாக இயற்றி வருகிறார். ஏறக்குறைய இந்த 1½ மாத காலத்தில் 22 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், எதிர்க்கட்சிகளுடைய கருத்துகளை கேட்காமல் நிறைவேற்றி உள்ளார்.

கண்டன இயக்கம்

எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மோடி அரசாங்கத்தை கண்டித்து வருகிற 6-ந்தேதி தமிழகம் முழுவதும் கட்சியின் கண்டன இயக்கத்தை நடத்துவது என தீர்மானித்துள்ளோம். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அறிமுகமாகி, அமலுக்கு வருமானால் சாதாரண ஏழை, எளிய மக்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இருக்கிற கல்வி உரிமையை பறிப்பதற்கு தான் வழிவகை செய்யும்.

முத்தலாக் மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஆதரவு தெரிவிக்கிறார். மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. நவநீத கிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளார். அ.தி.மு.க.வின் உண்மையான நிலை என்ன? இரட்டை வேடம் போடுகிற கபட நாடகத்தை எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் மேற்கொண்டு இருக்கிறது. வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி அடையும். ஆட்சி அதிகாரத்திற்காக எதையும் விட்டு கொடுக்கிற எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து மகத்தான போராட்டத்தை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story