நில அளவு செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
நில அளவு செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டார்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் ( வயது 30). இவர் ஆர்.கே.பேட்டை தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக வேலை பார்த்து வருகிறார். இவரிடம் மூரகுப்பம் என்கிற கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேஷ் தனது நிலத்தை சர்வே செய்து தரும்படி கேட்டார்.
அதற்கு சர்வேயர் சரவணன் ரூ.3 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. தன்னால் அவ்வளவு பணம் தரமுடியாது என்று ராஜேஷ் தெரிவித்தார். இதையடுத்து சரவணன் ரூ.2500 கொடுத்தால் நிலத்தை சர்வே செய்வதாக தெரிவித்தார்.
லஞ்சம் தர விருப்பம் இல்லாத ராஜேஷ் இது குறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாத சேகரன் அறிவரைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை ராஜேஷ் நேற்று சர்வேயர் சரவணனிடம் கொடுத்தார்.
அப்போது மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சரவணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.