பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்
மராட்டியத்தில் பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்.
மும்பை,
மராட்டியத்தில் பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்.
சட்டமன்ற தேர்தல்
மராட்டியத்தில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து விரைவில் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இரு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆளும் பா.ஜனதா, சிவசேனாவில் சேர்ந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் நவிமும்பை மாநகராட்சியின் தேசியவாத காங்கிரஸ் கவுன்சிலர்கள் 52 பேர் பா.ஜனதாவில் சேர்ந்தனர்.
எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா
இந்தநிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிதாஸ் கோலம்கர் (மும்பை வடலா), தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்தீப் நாயக் (நவிமும்பை ஐரோலி), வைபவ் பிச்சாத் (அகோலா), சிவந்தரராஜே போஸ்லே (சத்தாரா) ஆகியோரும் பா.ஜனதாவில் இணைய முடிவு செய்தனர்.
இதற்காக நேற்று முன்தினம் அவர்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகினார்கள். 4 பேரும் சபாநாயகர் ஹரிபாவு பாகடேவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர்.
பா.ஜனதாவில் இணைந்தனர்
இந்தநிலையில், நேற்று மும்பை நரிமன்பாயிண்டில் நடந்த நிகழ்ச்சியில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோர் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தனர். தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரான சித்ரா வாக்கும் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டார்.
அவர்களுக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், கட்சி துண்டு அணிவித்தும், பூச்செண்டு கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தங்களது எம்.எல்.ஏ.க்கள் அணி மாறியிருப்பது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story