போரூரில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
போரூரில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி,
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி மில்வின்ராஜ் (வயது 39). டெல்லியை சேர்ந்தவர் கீதுசிங் (33). சாப்ட்வேர் என்ஜினீயர்களான இருவரும், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். அந்தோணி மில்வின்ராஜ் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கீதுசிங்கும் திருமணமாகி கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
இதையடுத்து அந்தோணி மில்வின்ராஜ்–கீதுசிங் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில மாதங்களாக போரூர், உதயா நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் கணவன்–மனைவி போல் ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் அந்தோணி மில்வின்ராஜ் மீது கீதுசிங் சந்தேகப்பட்டார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இருவருக்கும் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அந்தோணி மில்வின்ராஜ் வேலைக்கு சென்று விட்டார்.
பின்னர் இரவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது கீதுசிங் அறை கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. நீண்டநேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்தோணி மில்வின்ராஜ், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அங்கு கீதுசிங், தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த போரூர் போலீசார், கீதுசிங் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.