முன்னாள் எம்.பி. குழந்தைவேலு மனைவி கொலை: வீட்டை எனது பெயருக்கு மாற்றி தர மறுத்ததால் தாயை கொன்றேன் - கைதான மகன் வாக்குமூலம்


முன்னாள் எம்.பி. குழந்தைவேலு மனைவி கொலை: வீட்டை எனது பெயருக்கு மாற்றி தர மறுத்ததால் தாயை கொன்றேன் - கைதான மகன் வாக்குமூலம்
x
தினத்தந்தி 1 Aug 2019 5:15 AM IST (Updated: 1 Aug 2019 4:13 AM IST)
t-max-icont-min-icon

மறைந்த முன்னாள் எம்.பி. குழந்தைவேலு மனைவி கொலை வழக்கில் கைதான அவருடைய மகன், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் வீட்டை எனது பெயருக்கு மாற்றி தர மறுத்ததால் தாயாரை கொன்றதாக தெரிவித்து உள்ளார்.

அடையாறு,

திருச்செங்கோடு தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. குழந்தைவேலுவின் மனைவி ரத்தினம் (வயது 63). சென்னை சாஸ்திரி நகர் 6-வது அவென்யூவில் வசித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி ரத்தினத்தை, அவரது மகன் பிரவீன்(35) கொடூரமாக கொலை செய்தார்.

இந்த வழக்கில் கடந்த 3 மாதமாக தலைமறைவாக இருந்த பிரவீனை, சாஸ்திரி நகர் போலீசார் கடந்த 29-ந்தேதி டெல்லியில் கைது செய்து விமானம் மூலம் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

போலீசாரிடம் பிரவீன் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

நான் வெளிநாட்டில் மென்பொருள் டிசைனிங் சம்பந்தபட்ட வேலை செய்து வந்தேன். சிறுவயது முதலே எனக்கும், எனது தாயாருக்கும் ஒத்துவராது. அவர் என்னை சரியாக கவனித்துக்கொள்ள மாட்டார். எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படும்.

இதனால் எனக்கு எனது தாயார் மீது வெறுப்பு ஏற்பட்டது. என் தந்தையின் ஈமச்சடங்கில் கூட எனது பேச்சை கேட்காமல் அவர்கள் விருப்பப்படியே செய்தார்கள். இதனால் நான் அவருடன் சரியாக பேசுவது கிடையாது,

வெளிநாட்டில் இருந்து கடந்த மார்ச் மாதம் இந்தியா திரும்பினேன். எனக்கு வெளிநாட்டில் செட்டில் ஆகவேண்டும் என்று விருப்பம் இருந்ததால் சென்னையில் எனது தாயார் தங்கி இருந்த வீட்டை எனது பெயருக்கு மாற்றித்தரும்படியும், அதை விற்று விட்டு வெளிநாட்டுக்கு செல்லப் போவதாகவும் என் தாயாரிடம் கூறினேன்.

ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளாமல் தனது காலம் வரை இந்த வீட்டில்தான் வசிப்பேன், அதன் பிறகு சொத்தை என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என பிடிவாதமாக கூறி விட்டார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவர் உயிருடன் இருக்கும் வரை எனக்கு சொத்து கிடைக்காது என தெரிந்ததால் எனது தாயாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

அதன்படி ஏப்ரல் மாதம் 14-ந்தேதி வீட்டுக்கு சென்றேன். அங்கு எனது தாயார் தனியாக இருந்தார். அப்போது எங்களுக்குள் மீண்டும் சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் நான், அவரை கீழே தள்ளினேன். அவர் சத்தம் போடாமல் இருக்க வாயில் பேப்பரை திணித்து டேப்பால் ஒட்டினேன். அவர் அசையாதவாறு இருக்க அவரது கை, கால்களை கட்டிவிட்டு கத்தியால் மார்பில் குத்தினேன். இதில் ரத்தம் பீறிடவே அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பின்னர் திட்டமிட்டபடி அங்கிருந்து பாலவாக்கத்தில் இருக்கும் ஆட்டோ டிரைவர் சத்யஜோதி வீட்டுக்கு சென்று குளித்து விட்டு, சென்டிரல் சென்றேன். அங்கிருந்து ரெயில் மூலம் புவனேஸ்வர் சென்றேன். அங்கு பூரி ஜெகநாதர் கோவில் அருகே ஒரு வாரம் தங்கிவிட்டு அங்கிருந்து டெல்லி சென்று தங்கி இருந்தபோது போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, கைதான பிரவீனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story