மாவட்ட செய்திகள்

பல்லடம் அருகே 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + 8th grade student commits suicide near Palladam

பல்லடம் அருகே 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

பல்லடம் அருகே 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
பல்லடம் அருகே 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான். இது தொடர்பாக உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லடம்,

பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் சுந்தரம் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40), விசைத்தறியாளர். திருப்பூர்-கோவை மாவட்ட விசைத்தறியாளர் சங்க துணைத்தலைவராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி திலகம் (36). இவர்களது மூத்த மகன் ராஜூ அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறான். இளைய மகன் சஞ்சீவ் (13) பெரும்பாலியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.


இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து சஞ்சீவ் வீடு திரும்பினான். அப்போது அவனது தந்தை சக்திவேல் வீட்டு அருகே உள்ள விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த சஞ்சீவ் கதவை உள்புறமாக பூட்டினான். பின்னர் அங்குள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான்.

இந்த நிலையில் வீடு திரும்பிய திலகம் கதவு உட்புறமாக பூட்டி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கதவை தட்டி பார்த்தும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டின் ஜன்னல் கதவை திறந்து உள்ளே பார்த்தார். அப்போது வீட்டுக்குள் சஞ்சீவ் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியில் அலறினார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். தகவல் அறிந்து பல்லடம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சஞ்சீவ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை சஞ்சீவ்வின் உறவினர்கள், பெற்றோர் திரண்டு பல்லடம் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். போலீஸ் நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மாணவரின் தந்தை சக்திவேல் கூறும் போது, கடந்த சில நாட்களாக சஞ்சீவ் மிகவும் சோர்வாக காணப்பட்டான். ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்டதற்கு பதில் எதுவும் கூறவில்லை. பள்ளியில் யாராவது சத்தம் போட்டார்களா? என்றதற்கும் பதில் அளிக்கவில்லை என்றார்.

இதையடுத்து மாணவரின் உறவினர்கள் கூறும் போது, மாணவர் சஞ்சீவ் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கு யார் காரணம்? என்பதை போலீசார் தெளிவுப்படுத்த வேண்டும். பள்ளியில் ஏதேனும் சம்பவம் நடைபெற்றதா? எனவும் விசாரிக்க வேண்டும் என்றனர்.

இதற்கிடையே மாணவர் படிக்கும் பள்ளிக்கு சென்ற சில உறவினர்கள், சம்பவத்தன்று மாணவர் பள்ளியில் இருந்த போது பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்க்க வேண்டும் என்று கூறியதற்கு பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததாக கூறினார்கள்.

இந்த சம்பவம் பல்லடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.