10 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு புதுச்சேரியில் நாளை முதல் தடை - அரசு அதிரடி அறிவிப்பு


10 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு புதுச்சேரியில் நாளை முதல் தடை - அரசு அதிரடி அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Aug 2019 12:00 AM GMT (Updated: 31 July 2019 11:40 PM GMT)

புதுவையில் பைகள், குவளைகள், தட்டுகள் உள்பட 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நாளை முதல் அமலுக்கு வருவதாக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

புதுச்சேரி,

தமிழகத்தில் 14 விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

புதுவையிலும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கவேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசும் இதை ஏற்று தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் நடைமுறைப்படுத்தாமல் அமல்படுத்துவதற்கான தேதியை உறுதி செய்யாமல் இருந்து வந்தது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்படாததால் அதே நிலைமை நீடித்தது. ஆனால் இந்த கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் 21-ந்தேதி அமைச்சர் கந்தசாமி தலைமையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

அப்போது ஒரு சில பொருட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆகஸ்டு 1-ந்தேதி முதல் (இன்று) பிளாஸ்டிக் தடை அமலுக்கு வரும் என்று அமைச்சர் கந்தசாமி அறிவித்திருந்தார். ஆனால் இந்த தடை உத்தரவு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து புதுவை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் ஸ்மிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு, புதுவை யூனியன் பிரதேசத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க உத்தேசித்து பொதுமக்களின் கருத்துகளை பெற அதன் வரைவு அறிக்கை கடந்த 8.2.2019 அன்று அரசு சார்பில் வெளியிட்டது. அதன்படி சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் தலைமையில் பிளாஸ்டிக் வர்த்தகர் சங்கம், ஜவுளி சங்கம் மற்றும் உணவு விடுதி சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில் பின்வரும் 10 வகையான ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தயாரித்தல், எடுத்துச் செல்வது, விற்பனை செய்வது, சேகரித்து வைத்தல் மற்றும் பயன்பாட்டிற்கு நாளை (வெள்ளிக் கிழமை) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாலித்தீன், பிளாஸ்டிக், பாலிப்ரொப்பலீன் தூக்குப் பைகள் (கேரி பேக்குகள்), பாலித்தீன், பிளாஸ்டிக் குவளைகள், பாலித்தீன், பிளாஸ்டிக் தட்டுகள், தெர்மாக்கோல் குவளைகள், தெர்மாக்கோல் தட்டுகள், உணவு பொருட்களை கட்ட உபயோகிக்கும் பிளாஸ்டிக் ஒட்டும்தாள், உணவு அருந்தும் மேஜையின் மேல் விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், நீர் நிரப்ப பயன்படும் பைகள் (தண்ணீர் பாக்கெட்டுகள்), பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் (ஸ்டிரா), பிளாஸ்டிக் கொடி போன்றவை தடை செய்யப்படுகிறது.

நெய்யப்படாத பாலிப்ரொப்பலீன் பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் பொருட்களை மூடுவதற்கு பயன்படும் பிளாஸ்டிக் தாள்கள், பருப்பு, தானியங்கள், மருந்துகள் மற்றும் பால் ஆகியவைகளை விற்பனை செய்ய பயன்படும் பைகள், பல அடுக்கு பேக்கேஜிங் பொருட்கள், ஒட்டும்தாள், திட மற்றும் உயிர் மருத்துவ கழிவுகளை சேகரிக்க பயன்படும் பைகள் (40 x 50 செ.மீ. அளவுள்ளவை), தோட்டக்கலை நாற்றுகளுக்கு பயன்படும் பிளாஸ்டிக் பைகள் ஆகிய பிளாஸ்டிக் பொருட்கள் அனுமதிக்கப்படுகிறது.

இந்த தடையாணையை மாசுகட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை தாசில்தார்கள், உணவு பாதுகாப்புத்துறை உணவு ஆய்வாளர், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து வருவாய் அலுவலர்கள் தங்கள் அதிகாரத்துக்குட்பட்ட ஆட்சிபரப்பில் செயல்படுத்துவார்கள். மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலாளர் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.

புதுவை மாசு கட்டுப்பாட்டு குழும தலைவர் மற்றும் உறுப்பினர் செயலர் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) விதி 1986 பிரிவு 190ன்படி புகார்களை பதிவு செய்வார். இந்த தடை ஆணையை மீறுபவர்கள் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) விதியின்படி தண்டிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Next Story