ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக கூட்டம் டீன் தலைமையில் நடந்தது


ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக கூட்டம் டீன் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 2 Aug 2019 4:30 AM IST (Updated: 1 Aug 2019 9:59 PM IST)
t-max-icont-min-icon

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவ– மாணவிகள் அறிமுக கூட்டம் டீன் பாலாஜிநாதன் தலைமையில் நடந்தது.

நாகர்கோவில்,

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவ– மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டத்தை பயில இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு ஒரு மாத காலம் அடிப்படை கல்வியை பயிற்றுவிக்க மருத்துவக்கல்வி இயக்குனரகம் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவ– மாணவிகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் அறிமுக கூட்டம் கல்லூரி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. டீன் பாலாஜிநாதன் தலைமை தாங்கினார். இதில் முதலாம் ஆண்டு மாணவ– மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

புதிய மாணவ– மாணவிகளுக்கு, சீனியர் மாணவ– மாணவிகள் பூங்கொத்துகள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். கல்லூரி டீன் பாலாஜிநாதன், மருத்துவத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் ஆகியோரும் மாணவ– மாணவிகளை வரவேற்றார்கள்.

பின்னர் புதிய மாணவ– மாணவிகள் மத்தியில் டீன் பாலாஜி நாதன் பேசும்போது கூறியதாவது:–

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள மாணவ– மாணவிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருப்பீர்கள். நீங்கள் அனைவரும் ஒழுக்கத்தோடு கல்வி கற்க வேண்டும். நீங்கள் படித்து முடித்துவிட்டு வெளியே செல்லும்போது சிறந்த மருத்துவர்களாக செல்ல வேண்டும். மாணவ– மாணவிகளின் கவனம் முழுவதும் படிப்பில்தான் இருக்க வேண்டும்.

நீங்கள் புதிய பாடத்திட்டத்தில் படிக்க இருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு ஒரு மாத காலம் அடிப்படை கல்வி பயிற்றுவிக்கப்பட உள்ளது. பெற்றோர்கள் மாணவர்களைப் பற்றி எந்த கவலையும் கொள்ள வேண்டாம். புதிய மாணவர்களை ராக்கிங் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அரசு உத்தரவுப்படி கல்லூரியில் ராக்கிங்க்கு எதிரான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

எனவே கல்லூரியிலும் சரி, விடுதிகளிலும் சரி 24 மணி நேரமும் மாணவ– மாணவிகள் டாக்டர்களால் கண்காணிக்கப்படுவார்கள். இரவில் மாணவர்கள் விடுதியில் ஆண் டாக்டர்களும், மாணவிகள் விடுதியில் பெண் டாக்டர்களும் தங்கியிருந்து கண்காணிப்பார்கள். அதனால் பெற்றோர்கள் மாணவர்களை பற்றி எந்த கவலையும் கொள்ள வேண்டாம்.

இவ்வாறு டீன் பாலாஜிநாதன் பேசினார்.

பின்னர் முதலாம் ஆண்டு மாணவ– மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் பிரின்ஸ் பயஸ், உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுக வேலன், உதவி உறைவிட மருத்துவ அதிகாரிகள் கலைக்குமார், ரெனிமோள், துறைத்தலைவர்கள் ஜோஸ் ஹேமலதா, சுரேஷ்பாலன், ஜெயலால் மற்றும் பேரசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், டாக்டர்கள், மருத்துவ மாணவ– மாணவிகள் கலந்து கொண்டனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவ– மாணவிகளுக்கு அடிப்படை கல்வி தொடங்குகிறது.


Next Story