வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 1 Aug 2019 10:45 PM GMT (Updated: 1 Aug 2019 3:03 PM GMT)

வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறியுள்ளார்.

திருவண்ணாமலை, 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி பொருளாதாரத்தில் முன்னேற்றம் அளிக்கும் வகையில் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தினை அரசு அறிவித்துள்ளது. அதன்படி 2019- 20-ம் ஆண்டுக்கு இலக்காக 180 மனுதாரர்களுக்கு மானியமாக ரூ.110 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 35 வயது பொது பிரிவினருக்கும், 45 வயது சிறப்பு பிரிவினருக்கும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கல்வித் தகுதி குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதிகபட்சமாக உற்பத்தி தொழிலுக்கு ரூ.10 லட்சம், சேவை தொழிலுக்கு ரூ.3 லட்சம் வியாபாரத்திற்கு ரூ.1 லட்சம் வரை கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.

திட்ட மதிப்பில் 25 சதவீதம் மானியம் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படும். தகுதியுள்ள நபர்கள் www.msm-e-o-n-l-i-ne.tn.gov.in/uye-gp என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்து விண்ணப்பத்தினை இரு நகல்களாக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் உரிய விபரங்கள் பெற திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தொழில் மைய மேலாளரை வேலை நாட்களில் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story