‘நீட்’ தேர்வில் விலக்கு பெற தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


‘நீட்’ தேர்வில் விலக்கு பெற தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 Aug 2019 10:30 PM GMT (Updated: 1 Aug 2019 5:17 PM GMT)

பெரம்பலூர் அருகே ‘நீட்’ தேர்வு காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன்மூலம் ‘நீட்’ தேர்வில் விலக்கு பெற தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆம்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

ஆம்பூர், 

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை ஆம்பூர் அருகே செங்கிலிகுப்பம் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள், தொகுதி பிரச்சினைகள், காவிரி, பாலாறு, மேகதாது, நீட், விவசாயிகள், நம்முடைய மொழி ஆகிய எந்த பிரச்சினையாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் தி.மு.க.வை சேர்ந்த 38 பேரின் குரல் ஒலித்து கொண்டிருக்கிறது. அதோடு 39-வது குரலாக கதிர்ஆனந்தின் குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். அதற்காக உங்களை தேடி, நாடி வந்து கொண்டிருக்கிறோம்.

இந்த தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் தேர்தலை நடத்தாமல் நிறுத்தி வைத்தார்கள். தேர்தலை நிறுத்தி வைத்தாலும் தி.மு.க.விற்கு கிடைக்க வேண்டிய வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

தமிழகத்தில் நடைபெறும் எடப்பாடியின் ஆட்சியை, ஆட்சி என்று சொல்லக்கூடாது, காட்சி ஆகும். எடப்பாடி தலைமையிலான ஆட்சி எடுபிடி ஆட்சியாகும். மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சிக்கு அடிபணிந்து நடக்கும் ஆட்சி ஆகும். அவர்கள் நாட்டு மக்களையோ, மக்களின் நலனையோ சிந்தித்து கூட பார்க்கவில்லை.

பெரம்பலூர் தொகுதியில் கீர்த்தனா என்ற மாணவி ‘நீட்’ தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி தற்போது வந்துள்ளது. ஏற்கனவே அனிதாவை தொடர்ந்து 5 அல்லது 6 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர்.

கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போதும், ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போதும் ‘நீட்’ தேர்வு தமிழகத்திற்கு வரமுடியவில்லை. ஆனால் எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் நீட் தேர்வு வந்துள்ளது. இதனால் மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கிறது. கீர்த்தனா என்ற மாணவி தன்னைவிட தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்ற ஒரு பெண், நீட் தேர்வில் தேர்வு பெறுகிறார். ஆனால் அதைவிட அதிகம் பெற்ற நான் நீட் தேர்வில் தேர்வு பெற முடியாத காரணத்தால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதி வைத்துவிட்டு இறந்ததாக தகவல் வந்துள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்று தருகிறோம் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்பே சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்தை அவர் திருப்பி அனுப்பி வைத்துள்ளார். இந்தநிலையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இத்தகையை சூழ்நிலையில் நாட்டை பற்றியோ மக்களை பற்றியோ, விவசாயிகளை பற்றியோ, தொழிலாளர்களை பற்றியோ, மாணவ, மாணவிகளை பற்றியோ கவலை படாத எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப் போகிறோம். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நமது வேட்பாளர் கதிர்ஆனந்தை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். வேலூர் தேர்தலில் கதிர் ஆனந்திற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story