வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக்கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது


வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக்கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது
x
தினத்தந்தி 2 Aug 2019 4:30 AM IST (Updated: 1 Aug 2019 11:07 PM IST)
t-max-icont-min-icon

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திருவாரூரில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக்கோரி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார்.

கிராம உதவியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்து, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு பெற 10 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற நிலையை மாற்றி 5 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். மேலும் வருவாய்த்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களில் கிராம உதவியாளர்களுக்கு 50 சதவீதம் வழங்க வேண்டும்.

பொங்கல் போனஸ்

அரசு துறையில் டி பிரிவு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல ஆண்டுதோறும் கிராம உதவியாளர்களுக்கு சதவீத அடிப்படையில் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிராம உதவியாளர்களை கிராம நிர்வாக பணியை தவிர அரசு அலுவலகங்களில், இரவு காவல் பணிக்கு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மீண்டும் பணி அமர்த்துவதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத்தலைவர் முருகையன், முன்னாள் மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பைரவநாதன், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், மருத்துவதுறை நிர்வாக ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் மூர்த்தி, நெடுஞ்சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மகாலிங்கம், வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளர் உஷா, மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சந்திரன் நன்றி கூறினார்.

Next Story