சூளகிரி அருகே குப்பை வண்டி கவிழ்ந்து துப்புரவு பணியாளர் பலி
சூளகிரி அருகே குப்பை வண்டி கவிழ்ந்து துப்புரவு பணியாளர் பலியானார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள பத்தலப்பள்ளி ஊராட்சியை சேர்ந்தவர் திம்மராயப்பா (வயது 52). இவர் பத்தலப்பள்ளி ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை வண்டியில் குப்பைகளை சேகரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டார்.
இதையொட்டி மாலை 4 மணி அளவில் அவர் சென்ற குப்பை வண்டி நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குழிக்குள் விழுந்த அவர் மீது குப்பை வண்டி விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த திம்மராயப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் திம்மராயப்பாவை காணாமல் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். இதைத் தொடர்ந்து இரவு அவர் சாலையோரத்தில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் திம்மராயப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story