பூதலூர் வட்ட வழங்கல் அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.9,250 பறிமுதல்


பூதலூர் வட்ட வழங்கல் அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.9,250 பறிமுதல்
x
தினத்தந்தி 1 Aug 2019 10:15 PM GMT (Updated: 1 Aug 2019 7:04 PM GMT)

பூதலூர் வட்ட வழங்கல் அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அங்கு கணக்கில் வராத ரூ.9,250-ஐ பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பூதலூரில் உதவி வட்ட வழங்கல் அதிகாரி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 82 இடங்களில் ரேஷன் கடைகள் உள்ளன. இந்த ரேஷன் கடை ஊழியர்களிடம் ஒவ்வொரு மாதமும் மாத இறுதியில் கூட்டம் நடைபெறும் போது பணம் வசூல் செய்யப்படுவதாக தஞ்சை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார், மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து 3 மணி நேரம் இந்த சோதனை நடந்தது.

இந்த சோதனையின்போது அங்கு இருந்த கணக்கில் வராத ரூ. 9 ஆயிரத்து 250 பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் கடை ஊழியர்களிடம் இருந்து பணம் வசூல் செய்வதற்காக ஊழியர் அல்லாத ஒருவரை பணியில் நியமித்து இருந்ததும் தெரிய வந்தது. அவர் ஊழியர்களிடம் ரூ. 8,250 வசூல் செய்து வைத்திருந்தார். மேலும் அங்கிருந்த உதவி வட்ட வழங்கல் அதிகாரியிடம் ரூ.1000 இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அங்கிருந்த ரேஷன் கடை ஊழியர்களிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் பணம் இருப்பது தெரிய வந்தது. ஆனால் அந்த பணத்திற்கு அவர்கள் உரிய கணக்கு காண்பித்ததை அடுத்து அந்த பணம் அவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. கணக்கில் வராத பணம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், உதவி வட்ட வழங்கல் அதிகாரி கேத்தரின் ஆரோக்கிய மேரி மற்றும் பணம் வசூலிக்க நியமிக்கப்பட்ட நபரான தங்கமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story