கொடுத்த பணத்தை திருப்பி தராததால் அங்கன்வாடி பெண் சமையலரிடம் நகையை பறித்த வியாபாரி கைது
கொடுத்த பணத்தை திருப்பி தராததால் அங்கன்வாடி பெண் சமையலரிடம் நகையை பறித்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
ஓமலூர்,
ஓமலூர் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணி அளவில் தர்மபுரியில் இருந்து வந்த பஸ்சில் ஒரு பெண் இறங்கினார். அப்போது அவரிடம் இருந்த நகையை பறித்துக்கொண்டு ஒருவர் ஓடினார். உடனே அந்த பெண் சத்தம் போடவே, பொதுமக்கள் அந்த நபரை மடக்கி பிடித்து ஓமலூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் நிலையத்தில் அந்த பெண்ணிடமும், பிடிபட்ட நபரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் அந்த பெண், தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள அரியகுளம் பகுதியை சேர்ந்த ஜெயசீலன் என்பவரது மனைவி கலைவாணி (வயது 35) என்பதும், இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதுடன், அதே பகுதியில் உள்ள அங்கன்வாடியில் சமையலராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
மேலும் நகையை பறித்துக்கொண்டு ஓடியவர் எடப்பாடி பி.என்.பாளையம் அருகே உள்ள பூமரத்துக்கொட்டாய் பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி பிரகாஷ் (32) என்பதும் தெரிந்தது. கலைவாணிக்கும், பிரகாசிற்கும் போனில் மிஸ்டு கால் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2 பேரும் போனில் பேசியும், நேரிலும் பழகி வந்துள்ளனர். இதை பயன்படுத்தி கலைவாணி, பிரகாசிடம் இருந்து ரூ.48 ஆயிரம் வாங்கியதாக தெரிகிறது. அந்த பணத்தை அவர் திரும்பி கேட்டுள்ளார். ஆனால் கலைவாணி அதனை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கலைவாணி இருசக்கர வாகனம் வாங்குவதற்காக தன்னுடைய ஒரு பவுன் தங்க நகையை பிரகாசிடம் அடமானம் வைத்து கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு பிரகாஷ், தர்மபுரியில் வைத்தால் குறைவான பணம் மட்டுமே கிடைக்கும் என்றும், எடப்பாடியில் அடமானம் வைத்தால் அதிக பணம் கொடுப்பார்கள் என கூறி தர்மபுரியில் இருந்து கலைவாணியை பஸ்சில் எடப்பாடிக்கு அழைத்து வந்துள்ளார்.
இதனிடையே பஸ் ஓமலூர் வந்த போது, கலைவாணியிடம் கொடுத்த ரூ.48 ஆயிரத்தை மீண்டும் பிரகாஷ் கேட்டுள்ளார். அதற்கு கலைவாணி பதில் எதுவும் கூறாததால், பணத்துக்கு பதில் ஒரு பவுன் நகையை பறித்துக்கொண்டு, பிரகாஷ் ஓடி உள்ளார். இதைத்தொடர்ந்து அவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து கலைவாணி கொடுத்த புகாரின் பேரில் நகையை பறித்ததாக பிரகாசை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story