பள்ளி அருகே அசுத்தமாக காட்சி அளிக்கும் குளம் தொற்று நோய் பரவும் அபாயம்


பள்ளி அருகே அசுத்தமாக காட்சி அளிக்கும் குளம் தொற்று நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 2 Aug 2019 4:00 AM IST (Updated: 2 Aug 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி அருகே குளம் ஒன்று அசுத்தமாக காட்சி அளிப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம் கார்காவயல் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டாகுடி கிராமத்தில் 1500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். அனைவரும் விவசாயத்தையே தொழிலாக கொண்டவர்கள். இந்த கிராமத்தில் சிவன் கோவில் தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 150 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

பள்ளிக்கு அருகே உள்ள ½ ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் ஒன்று நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லை. இந்த குளத்தை சுற்றி வீடுகள் உள்ளன. இந்த நிலையில் குளத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. குப்பைகள் நிறைந்து, புதர்மண்டி குளமே அசுத்தமாக காட்சி அளிக்கிறது. துர்நாற்றமும் வீசுகிறது. இதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள். குளத்தில் விஷ பூச்சிகள் நடமாட்டமும் உள்ளது. இதுகுறித்து கோட்டாகுடியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

கோட்டாகுடியில் பள்ளி அருகே உள்ள குளம் அசுத்தமான நிலையில் உள்ளது. விஷ பூச்சிகள் நடமாட்டத்தால் மாணவர்களும், குளம் அருகில் குடியிருப்பவர்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய சுகாதார அதிகாரிகளிடம் மனு அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

குளத்தை சுத்தம் செய்து, தூர்வாரி தண்ணீர் நிரப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story