கவுந்தப்பாடி அருகே பரபரப்பு சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் ரிக் வண்டியை சிறைபிடித்தனர்


கவுந்தப்பாடி அருகே பரபரப்பு சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் ரிக் வண்டியை சிறைபிடித்தனர்
x
தினத்தந்தி 1 Aug 2019 11:00 PM GMT (Updated: 1 Aug 2019 7:32 PM GMT)

கவுந்தப்பாடி அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ரிக் வண்டியை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கவுந்தப்பாடி, 

கவுந்தப்பாடி அருகே ஆயிக்கவுண்டன்பாளையத்தில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஓடை புறம்போக்கு நிலத்தை சுடுகாடாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனையொட்டி உள்ள நிலத்தில் சிலர் பயிர் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுடுகாட்டையொட்டிய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்து கொண்டு இருந்தது. இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் சுடுகாட்டு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறியும், ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் ரிக் வண்டியை சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் விடிய விடிய அங்கேயே உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கவுந்தப்பாடி போலீசார், வருவாய் ஆய்வாளர் லட்சுமி மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று பகல் 11 மணி அளவில் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள், ‘ஏற்கனவே சுடுகாட்டு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து பயிர் செய்து உள்ளனர். இதனால் சுடுகாடு இடம் சுருங்கிவிட்டது.

தற்போது அந்த இடத்தையும் ஆக்கிரமித்து ஆழ்துளை கிணறு அமைத்தால் சுடுகாடே காணாமல் போய்விடும். நாங்கள் பிணத்தை புதைக்கவே முடியாது. எனவே இங்கு ஆழ்துளை கிணறு அமைக்கக்கூடாது’ என்றனர்.

அதற்கு அதிகாரிகள் கூறும்போது, ‘உடனே நில அளவீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை ஆழ்துளை கிணறு அமைக்கக்கூடாது’ என்றனர். இதைத்தொடர்ந்து பணி நிறுத்தப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story