கோடநாடு வழக்கு விசாரணை, ‌‌ஷயான், மனோஜ் உள்பட 9 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்


கோடநாடு வழக்கு விசாரணை, ‌‌ஷயான், மனோஜ் உள்பட 9 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 1 Aug 2019 10:30 PM GMT (Updated: 1 Aug 2019 7:41 PM GMT)

கோடநாடு வழக்கு விசாரணைக்காக ‌‌ஷயான், மனோஜ் உள்பட 9 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜரானார்கள்.

ஊட்டி,

கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பிரகா‌‌ஷ் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக ‌‌ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோ‌‌ஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

‌‌ஷயான், மனோஜ், திபு ஆகிய 3 பேர் கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று கோடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. ‌‌ஷயான், மனோஜ், திபு ஆகியோரை போலீசார் கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்து வந்து ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். மேலும் மனோஜ்சாமி, ஜித்தின்ராய், சந்தோ‌‌ஷ்சாமி, பிஜின், சதீசன், சம்சீர் அலி ஆகிய 6 பேர் கோர்ட்டில் ஆஜராகினர். உதயகுமார் மட்டும் ஆஜராகவில்லை.

வழக்கில் இருந்து அனைவரையும் விடுவிக்கக்கோரிய மனு மீது வக்கீல் ஆனந்த் ஆஜராகி வாதாடினார். கோடநாடு வழக்கு தொடர்பாக சாட்சியங்கள் இல்லை, மேலும் பங்களாவில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஒப்படைக்கப்படவில்லை, வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சென்ற வாகனத்தில் பதிவுஎண் இல்லை, ஆகவே இந்த வழக்கில் இருந்து 10 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று அவர் நீதிபதியிடம் தெரிவித்தார்.

உதயகுமாரின் தாயார் இறந்து விட்டதால், அவரால் கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மாவட்ட நீதிபதி வடமலை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து கோடநாடு வழக்கு விசாரணையை வருகிற 13-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். அதனை தொடர்ந்து ‌‌ஷயான், மனோஜ், திபு ஆகிய 3 பேரை போலீசார் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென் றார்கள்.

Next Story