களியக்காவிளையில் பஸ் நிலையத்துடன் காய்கறி சந்தையை இணைக்க எதிர்ப்பு


களியக்காவிளையில் பஸ் நிலையத்துடன் காய்கறி சந்தையை இணைக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 1 Aug 2019 10:45 PM GMT (Updated: 1 Aug 2019 9:09 PM GMT)

களியக்காவிளையில் பஸ் நிலையத்துடன் காய்கறி சந்தையை இணைக்க எதிர்ப்பு போராட்டம் நடத்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்.

களியக்காவிளை,

களியக்காவிளை பஸ் நிலையம் அருகே காய்கறி சந்தை, மீன் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தை விரிவு படுத்த ரூ.3¼ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் உள்ள காய்கறி சந்தையை பஸ் நிலையத்துடன் இணைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு வியாபாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், வியாபாரிகள், அரசியல் கட்சியினர் அடங்கிய ஆலோசனை கூட்டம் களியக்காவிளையில் நடந்தது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பத்மநாப பிள்ளை தலைமை தாங்கினார். பிராங்கிளின், நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், காய்கறி சந்தையை பஸ் நிலையத்துடன் இணைப்பதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், பஸ் நிலையத்தை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள காலியிடத்தில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், வியாபாரிகள் சங்க ஆலோசகர் விஜயகுமார், மேல்புறம் ஒன்றிய தி.மு.க. அவைத்தலைவர் மாகின் அபுபக்கர், பா.ஜனதாவை சேர்ந்த சரவணவாஸ் நாராயணன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆல்பர்ட் சிங், கருங்கல் ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story