திருவாடானை யூனியனில், கண்மாய் மராமத்து பணிகள்
திருவாடானை யூனியனில் நடைபெற்று வரும் கண்மாய் மராமத்து பணிகளை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொண்டி,
திருவாடானை யூனியனில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்ட பணிகளை கலெக்டர் வீரராகவராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக வட்டாணம் கிராமத்திற்கு சென்ற அவர் குடிமராமத்து திட்டத்தின்கீழ் அங்குள்ள கண்மாயில் ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 9 மடைகள், கலுங்கு மராமத்து செய்தல் மற்றும் கரைகள் பலப்படுத்தும் பணிகள் போன்றவற்றை ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் வெள்ளையபுரம் அருகே உள்ள புல்லூர் கண்மாயில் ரூ.69 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும் மடைகள் மற்றும் 3 மடைகள் மராமத்து பணிகள் போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் குடிமராமத்து பணிகளுக்கான சங்க பிரதிநிதிகளிடம் பருவமழை காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் கண்மாய்கரை மற்றும் உள்பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை முழுமையாக அகற்றிவிட்டு பனை மரவிதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது திருவாடானை தாசில்தார் சேகர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் முத்தமிழரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story