நாகர்கோவில் அருகே ஒரே நாளில் துணிகரம் 2 கோவில்களில் நகை-பணம் கொள்ளை மேலும் 3 இடங்களில் திருட முயற்சி
நாகர்கோவில் அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து 2 கோவில்களில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும், 3 கோவில்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மேலகிருஷ்ணன்புதூர்,
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி அருகே கோவில்விளையில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இங்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் அதிகாலையில் பூசாரி முத்து லிங்கம் கோவில் நடையை திறக்க சென்றார். அப்போது, கோவிலின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறிக்கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, இதுபற்றி ஊர் நிர்வாகிகளுக்கும், சுசீந்திரம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசாத்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது, அம்மன் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலி, தங்க தாலி என 3½ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது. நள்ளிரவில் கொள்ளையர்கள் கோவிலுக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்துள்ளனர். பின்னர், பாத்திரங்கள் பாதுகாப்பு அறையின் கதவையும் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு பணம் எதுவும் இல்லாததால் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இதையடுத்து போலீசார் கோவிலின் அருகில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் 4 பேர் கொண்ட கும்பல் வருவதும், அவர்களில் ஒருவன் வெளியே காவலுக்கு நிற்க, மற்ற 3 பேரும் கோவிலுக்குள் புகுந்து நகையை கொள்ளையடித்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சியை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
பிள்ளையார்புரம் அருகே கேசவன்புதூரில் நாராயணசாமி கோவில் உள்ளது. இங்கு நேற்று காலையில் பூசாரி சென்ற போது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, சாமி கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் நகை மற்றும் உண்டியல் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதேபோல், புல்லுவிளை முத்தாரம்மன் கோவில், அதன் அருகில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில், திருநகர் மெயின் ரோட்டில் உள்ள பாலமுருகன் கோவில் ஆகிய 3 கோவில்களிலும் கதவுகள் உடைக்கப்பட்டு மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. அங்கும் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால், நகை-பணம் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.
போலீசாரின் விசாரணையில் 5 கோவில்களிலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.
ஒரேநாள் நள்ளிரவில் 5 கோவில்களில் மர்ம கும்பல் கைவரிசை காட்டி இருப்பதும் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story