ஊத்துக்கோட்டை அருகே தொழிலாளிக்கு பாட்டில் குத்து நண்பர் கைது


ஊத்துக்கோட்டை அருகே தொழிலாளிக்கு பாட்டில் குத்து நண்பர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2019 10:15 PM GMT (Updated: 2 Aug 2019 5:38 PM GMT)

ஊத்துக்கோட்டை அருகே தொழிலாளியை பீர் பாட்டிலால் குத்தியது தொடர்பாக அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள முக்கரம்பாக்கம் காலனி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர்கள் ராஜேஷ் (வயது 32), கோபி (38), ராஜா (22). இவர்கள் கிராம எல்லையில் உள்ள ஏரியில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். எல்லை கோட்டுக்கு அடையாளமாக மணல் கோடு போடப்பட்டிருந்தது. அப்போது இவர்களது நண்பரான அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி மதன் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக சென்றார். எல்லை கோட்டில் போடப்பட்டிருந்த மணல் கோடு மோட்டார் சைக்கிள் டயர் பட்டு அழிந்தது.

இதை கோபி கண்டித்தார். இதுகுறித்து வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த கோபி, ராஜா, ராஜேஷ் ஆகியோர் சேர்ந்து பீர் பாட்டிலால் குத்தியதில் மதன் படுகாயம் அடைந்தார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மதனை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை கைது செய்து ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார். மேலும் தப்பி ஓடிய கோபி, ராஜா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (26). நேற்று முன்தினம் தினேஷ் அந்த பகுதியை சேர்ந்த தனது நண்பரான பிரபு (28) என்பவருடன் முடிவெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தார். அவர்கள் வேப்பம்பட்டு பஜனை கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது சுற்றி வளைத்த 4 பேர் திடீரென தாங்கள் வைத்திருந்த கத்தியால் தினேசை வெட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்த தினேசை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தினேஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story