மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளைக்கு தி.மு.க.வினரே காரணம்முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு + "||" + DMK is responsible for murder and robbery in Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy alleges

தமிழ்நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளைக்கு தி.மு.க.வினரே காரணம்முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளைக்கு தி.மு.க.வினரே காரணம்முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளைகளுக்கு தி.மு.க.வினரே காரணம் என்று வேலூர் தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நேற்று அணைக்கட்டில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஓ.எஸ்.மணியன், கே.சி.வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஏ.சி.சண்முகத்துக்கு வாக்குகள் கேட்டு ஆதரவு திரட்டினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் நடந்த 543 தொகுதி தேர்தலில் வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது. தி.மு.க.வேட்பாளருக்கு வேண்டியவர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. அந்த பணக்கட்டில் எந்தெந்த பூத்துகளுக்கு உரியது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை வருமானவரித்துறையினர் கைப்பற்றியதால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அவர்கள் பதுக்கி வைத்திருந்த பணத்தை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் தமிழக அரசும், மத்திய அரசும் சேர்ந்து தேர்தலை நிறுத்திவிட்டதாக தி.மு.க.வினர் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி. நீங்கள் ஊழல் செய்யாமல் எப்படி 10 கோடி ரூபாய் வந்தது. அதை வைத்து தில்லுமுல்லு செய்து தேர்தலில் வெற்றிபெற நினைத்தார்கள். முடியவில்லை. தேர்தல் முடிந்ததும் அவர்கள் சட்டப்படியான நடவடிக்கையை சந்திக்கவேண்டி வரும். தவறு செய்தவர்கள் அவர்கள், ஆனால் நம்மீது பழிபோடுகிறார்கள்.

எல்லா கட்சிகளிலும் கட்சியில் இருப்பவர்களின் வாரிசுகள் அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் ஒரு கட்சியின் தலைவராக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வருவதுதான் தவறு என்கிறோம். உதயநிதி ஸ்டாலினை யாருக்கு தெரியும். அவரை சினிமாவில் நடிக்கவைத்து வாரிசு அரசியலுக்கு கொண்டு வருகிறார்கள்.

தேர்தலில் 4 அறிவிப்புகளை வெளியிட்டு தி.மு.க.வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் ஜெயலலிதா கொண்டு வந்து செயல்படுத்திய திட்டங்களை கூறினோம். ஆனால் நீங்கள் மறந்து விட்டீர்கள். எம்.ஜி.ஆர்.கொண்டுவந்த சத்துணவு திட்டத்தை கருணாநிதி கொச்சைப்படுத்தினார். ஆனால் அந்த திட்டத்தில் முட்டை வழங்கினார்.

மாணவர்களுக்கு காலணி, தனியார் பள்ளிகளுக்கு இணையான சீருடைகளை ஜெயலலிதா வழங்கினார். தி.மு.க. ஆட்சியில் இதுபோன்று வழங்கப்பட்டதா? ஜெயலலிதா எண்ணற்ற திட்டங்களை வழங்கினார். அறிவுப்பூர்வமான, உலகத்தர கல்விபெற 4 லட்சத்து 30 ஆயிரம்பேருக்கு மடிக்கண்னி வழங்கப்பட்டது. இன்னும் 10 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது.

மகப்பேறு நிதி உதவி ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. ஊட்டச்சத்து பெட்டகம், பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது. குழந்தை கருவில் இருக்கும்போதே நலத்திட்டங்களை பெறுகிறது. ஜெயலலிதா 76 அரசு கல்லூரிகளை கொண்டுவந்தார். இதன் மூலம் தி.மு.க. ஆட்சியில் 32 சதவீதமாக இருந்த கல்வியறிவு இன்று 48.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறுகிறார். கொலைசெய்யப்பட்ட திருநெல்வேலி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வெளியே வந்த ஸ்டாலின் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும், கொலை, கொள்ளை நடப்பதாகவும் சொன்னார். உமாமகேஸ்வரி, அவருடைய கணவர், பணிப்பெண்ணை கொலைசெய்தது யார்?. அதே கட்சியை சேர்ந்த மகளிர் அணி துணைசெயலாளரின் மகன். அவரை 2 நாளிலேயே காவல்துறையினர் கைது செய்தனர்.

தி.மு.க.வினரால்தான் கொலை, கொள்ளை நடக்கிறது. அவர்கள் ஒழுங்காக இருந்தால் கொலை, கொள்ளை, திருட்டு நடக்காது. பிரியாணி கடையில் சாப்பிட்டு விட்டு அதற்கு பணம் கேட்டால் கடைக்காரரை தாக்குகிறார்கள். அவர்ரள் மீது நடவடிக்கை எடுக்காமல் கட்சி தலைவர் ஸ்டாலின், பிரியாணி கடைக்கு சென்று கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்.

அதேபோன்று செல்போன்கடை, அழகுநிலையங்களிலும் புகுந்து தி.மு.க.வினர் தாக்குகிறார்கள். அவர்களே அராஜகம் செய்துவிட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஸ்டாலின் பேசுகிறார். எப்போதும் அ.தி.மு.க. அரசு தான் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதே இப்படி என்றால் இவர்களிடம் அதிகாரத்தை கொடுத்தால் எப்படி இருக்கும். தி.மு.க.வினர் தங்களை சரி செய்யவேண்டும். அவர்கள் நெய் டப்பாவைக்கூட திருடுகிறார்கள். இதை நான்சொல்லவில்லை அனைத்தும் ஊடகங்களில் வந்தவை.

விவசாய கடனை தள்ளுபடி செய்வோம் என்றார். இதை நம்பிய பெண்கள் 5 பவுனை வங்கியில் அடகுவைத்து பணம் பெற்று அந்த பணத்திலும் நகை வாங்கி அதையும் அடகுவைத்தார்கள். இப்போது வட்டி கட்டமுடியவில்லை. தி.மு.க.வை நம்பினால் இப்படித்தான் இருக்கும்.

கல்விக்கடன் தள்ளுபடி என்றார், ஒரு குடும்பத்திற்கு ரூ.6 ஆயிரம் தருவோம் என்றார். அதை நம்பி ஓட்டுபோட்டீர்கள். அவர்களுக்கு கிடைத்தது பொய்க்கு கிடைத்த வெற்றி. நாங்கள் எதைசெய்தோமோ அதை சொல்லி வாக்கு கேட்டோம். கடன் தள்ளுபடி பற்றி மக்கள் கேட்டால் நாங்கள் ஆட்சியில் இல்லை, வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால்தான் தள்ளுபடி செய்யமுடியும் என்கிறார். இது எப்படிப்பட்ட பித்தலாட்டம்.

ஒருவருக்கு ஆசையை தூண்டினால்தான் ஏமாற்றமுடியும் என்பதை சதுரங்கவேட்டை படத்தில் கூறுவார்கள். அதேபோன்றுதான் தி.மு.க.வினர் பொதுமக்களை ஏமாற்றி வெற்றிபெற்றுள்ளனர். நாங்கள் நினைத்திருந்தால் ஆட்சியை கவிழ்த்து இருப்போம் என்கிறார் ஸ்டாலின். நீங்கள் பலமுறை குட்டிக்கரணம் அடித்து பார்த்தும் எங்கள் ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை.

எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை அமைச்சர் பதவி ஆசைக்காட்டி பிரித்தீர்கள். அதை நம்பி வந்தவர்கள் இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள். உண்மை, தர்மம், நீதிதான் எப்போதும் ஜெயிக்கும். எத்தனை போராட்டங்களை மு.க.ஸ்டாலின் நடத்தினார். நாங்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மக்களை சந்தித்து பேசி தீர்வு கண்டோம். பொய் பேசுவதற்குகாக நோபல் பரிசு வழங்குவதாக இருந்தால் அதை ஸ்டாலினுக்கு வழங்கினால் பொருத்தமாக இருக்கும். சிறுபான்மை மக்கள் அமைதியாக வாழும் மாநிலம் தமிழகம்தான். விவசாயிகளுக்காக நீர்மேலாண்மை திட்டம், ரூ.100 கோடியில் 3 ஆண்டு திட்டம். அதில் ரூ.1000 கோடி ஒதிக்கி ரூ.600 கோடியில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. அதேபோன்று இந்தப்பகுதியில் மேல் அரசம்பட்டு அணைக்கட்டுவதற்கு பரிசீலனை செய்யப்படும்.

மழைநீரைசேமிக்க குடிமராமத்து பணிகள் கொண்டுவரப்பட்டு ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை ஏரிகள், பஞ்சாயத்து ஏரிகள் என மொத்தம் 39 ஆயிரம் ஏரிகள் உள்ளன. அவை அனைத்தும் படிப்படியாக தூர்வாரப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக 1519 ஏரிகள் ரூ.100 கோடியில் தூர்வாரப்பட்டது. அடுத்ததாக ரூ.328 கோடியில் 1511 ஏரிகள் தூர்வாரும் பணிக்காக எடுக்கப்பட்டது. தற்போது ரூ.500 கோடியில் 1,829 ஏரிகள் தூர்வார எடுக்கப்பட்டுள்ளது. இருக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்த சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்கப்படுகிறது. எந்த இயற்கை சீற்றம் வந்தாலும் அதில் இருந்து விவசாயிகளை காக்கும் அரசு அ.தி.மு.க. அரசுதான்.

தற்போது சோளத்தை தாக்கும் படைப்புழுவில் இருந்து, பாதுகாக்க ரூ.155 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர் பெரிய மாவட்டம். இதை இரண்டாக பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க பரிசீலனை செய்யப்படும். கேபிள் டி.வி.கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

இதுபோன்ற திட்டங்கள் தொடர இங்கு போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிபெறச்செயுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.