ரேஷன் கடை கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
ரேஷன் கடை கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து ஊராட்சி பாலமரத்துப்பட்டியில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக பாலமரத்துப்பட்டியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நல்லமநாயக்கன்பட்டி ரேஷன் கடைக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தங்கள் பகுதியிலேயே பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதையடுத்து பாலமரத்துப்பட்டியில் உள்ள பழமையான பள்ளி கட்டிடம் ஒன்றை பகுதி நேர ரேஷன் கடைக்காக அதிகாரிகள் தேர்வு செய்தனர். இதற்கிடையே அந்த கட்டிடம் மிகவும் பழமையானதாக உள்ளது என்று கூறி அதனை இடிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதையறிந்த பாலமரத்துப்பட்டி பொதுமக்கள் கட்டிடத்தை இடிக்க கூடாது. ரேஷன் கடையாக மாற்ற வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து அந்த கட்டிடத்தை இடிக்காமல் ரேஷன் கடைக்கு ஒதுக்குவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அதற்கான ஆணையும் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் தற்போது வரை அந்த ஆணை குடிமைப்பொருள் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாலமரத்துப்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடையை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையறிந்த பொதுமக்கள் ரேஷன் கடை கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் அஜாய்கோஸ் தலைமையில் நேற்று திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, பள்ளி கட்டிடத்தை இடிக்க தடை விதித்ததற்கான ஆணையை குடிமைப்பொருள் அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். பாலமரத்துப்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடையை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பள்ளி கட்டிடத்தை ரேஷன் கடைக்கு பயன்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story