மோட்டார் சைக்கிள் விபத்து: தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 11 மாத குழந்தை பரிதாப பலி-தாய் படுகாயம்


மோட்டார் சைக்கிள் விபத்து: தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 11 மாத குழந்தை பரிதாப பலி-தாய் படுகாயம்
x
தினத்தந்தி 3 Aug 2019 4:30 AM IST (Updated: 3 Aug 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த பம்மலில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 11 மாத ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது. உடன் சென்ற தாய் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 30). பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சிந்து (27). இவர்களுக்கு கனிஷ்கா (3), என்ற பெண் குழந்தையும், சர்வேஷ் என்ற 11 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், ராஜாராம் நேற்று மதியம் குழந்தை சர்வேஷூக்கு ஆதார் கார்டு எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் தனது 2 குழந்தைகளுடன், பல்லாவரம் நகராட்சி அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

பம்மல் நெடுஞ்சாலையில், உள்ள சர்ச் அருகே சென்றபோது, முன்னால் சென்ற தண்ணீர் லாரியை முந்த முயன்றார். அப்போது, ராஜாராம் நிலைதடுமாறியதில், சிந்துவும், குழந்தை சர்வேஷூம் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி கொண்டனர். இதில் குழந்தை சர்வேஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தாய் சிந்துவுக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தில், ராஜாராமும், கனிஷ்காவும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பானுமதி வழக்குப்பதிவு செய்து திருவண்ணாமலை மாவட்டம், கல்லதாழி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் கோவிந்தசாமி (46) என்பவரை கைது செய்தார்.

முன்னதாக விபத்து நடந்த பகுதியில் குவிந்த பொதுமக்கள், குடிபோதையில் லாரி ஓட்டி வந்ததாக கூறி லாரி டிரைவரை சரமாரியாக தாக்கினர். அவர்களிடம் இருந்து டிரைவர் கோவிந்தசாமியை சங்கர்நகர் போலீசார் மீட்டனர்.

பம்மல் நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story