போலி பீடி விற்பனை; 2 பேர் கைது


போலி பீடி விற்பனை; 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2019 11:30 PM GMT (Updated: 2 Aug 2019 10:47 PM GMT)

ராமநாதபுரத்தில் போலி பீடி விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் இருந்து போலி பீடிகளை கொண்டு வந்து விற்பனை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் கடைகளில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக பீடி விற்பனை செய்வதாக புகார் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த நிறுவனத்தினர் ராமநாதபுரத்தில் விசாரணை செய்தபோது தங்களின் நிறுவனத்தின் தயாரிப்பாக இல்லாமல் போலியாக தங்களின் லேபிள் ஒட்டி பீடி தயாரித்து விற்பனை செய்வதை கண்டறிந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பீடி நிறுவனத்தினர் போலீசில் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் ராமநாதபுரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

பஜார் போலீசார் நடத்திய சோதனையில் ராமநாதபுரம் கே.கே.நகர் மெயின்ரோட்டில் அமைந்துள்ள கடையில் போலி பீடி பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததை கைப்பற்றினர். போலி லேபிள்கள் ஒட்டப்பட்ட நிலையில் 8 பீடிபண்டல்களை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக பீடி நிறுவன நிர்வாகி அப்துல்லத்தீப் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடை உரிமையாளர் ராமநாதபுரம் வள்ளல்பாரி தெரு அப்துல்அஜீஸ் மகன் அப்துல்பாசித்(வயது38) என்பவரை கைது செய்தனர்.

போலீசாரின் இந்த சோதனையில் சில போலி புகையிலை பாக்கெட்டுகளும் இருந்தாக கூறப்படுகிறது. இவரிடம் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள கடையில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ராமநாதபுரம் நகர் போலீசார் மேற்கண்ட தகவலின்படி சம்பந்தப்பட்ட கடையில் நடத்திய சோதனையில் 20 போலி பீடி பண்டல்கள் இருந்ததை கண்டு அவற்றை கைப்பற்றினர். இதுதொடர்பாக கடை உரிமையாளர் ராமநாதபுரம் செம்மாதெரு ஆறுமுகம் என்பவரின் மகன் ஞானசேகரன்(42) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் கேரளாவில் இருந்து ஒருவர் காரில் வந்து மொத்தமாக விற்பனை செய்வதாகவும் குறைவான விலைக்கு கொடுத்ததால் போலி என்று தெரியாமல் வாங்கி சில்லறையாக விற்பனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பீடிகளை கேரளாவில் இருந்து தயாரித்து வந்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story