திருக்கோவிலூர் பகுதியில், ரூ.1¼ கோடியில் குடிமராமத்து பணி - கலெக்டர் ஆய்வு


திருக்கோவிலூர் பகுதியில், ரூ.1¼ கோடியில் குடிமராமத்து பணி - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 2 Aug 2019 10:45 PM GMT (Updated: 2 Aug 2019 11:20 PM GMT)

திருக்கோவிலூர் பகுதியில் ரூ.1¼ கோடி செலவில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்ட பணிகளை கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

திருக்கோவிலூர்,

தமிழக அரசின் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூ.48 லட்சம் செலவில் திருக்கோவிலூர் ஏரி குடிமராமத்து திட்டத்தின் கீழ் கரைகளை பலப்படுத்துதல், தூர்வாருதல், மதகுகள் சீரமைத்தல், நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாரி புதிதாக அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் நடைபெற்று வரும் இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், விவசாய சங்கத்தினரிடம் குடிமராமத்து திட்ட பணிகளை விரைவாகவும் திட்டமிட்டபடி குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அப்போது கலெக்டர் சுப்பிரமணியன் விவசாய சங்கத்தினரிடம் கூறுகையில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்க விவசாயிகளை கொண்டே பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாருவதுடன் மதகுகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை சரியான முறையில் மேற்கொள்வதன் மூலம் நீர்நிலைகளை பாதுகாப்பதுடன் மழைநீரை சேமிக்க முடியும் என்றார்.

இதேபோல் ஆவிகொளப்பாக்கம் ஏரி ரூ.24 லட்சம் செலவிலும், ஏமப்பேர் ஏரி ரூ.21 லட்சம் செலவிலும், முடியனூர் ஏரி ரூ.28 லட்சம் செலவிலும் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்ட பணிகளை கலெக்டர் சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது திருக்கோவிலூர் சப்-கலெக்டர் (பொறுப்பு) ஸ்ரீகாந்த், விழுப்புரம் பொதுப்பணித்துறை கோட்ட செயற்பொறியாளர் ஜவகர், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், திருக்கோவிலூர் தாசில்தார் சிவசங்கரன், உதவி பொறியாளர்கள் பாலாஜி, ஜோதி, ஞானசேகர், திருக்கோவிலூர் பாசன விவசாய சங்க நிர்வாகி டி.கே.டி.பாபு, ஊராட்சி செயலாளர்கள் தேவியகரம் என்.பாபு, முன்னாள் ஊராட்சி தலைவர் ராமமூர்த்தி, முடியனூர் ரவி, கொளப்பாக்கம் ஏழுமலை, ஏமப்பேர் முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அயோத்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story