ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க பூமி பூஜை


ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க பூமி பூஜை
x
தினத்தந்தி 3 Aug 2019 5:14 AM IST (Updated: 3 Aug 2019 5:14 AM IST)
t-max-icont-min-icon

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பை மீறி பூமி பூஜை நடைபெற்றது.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ஒக்ககுடி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு குடிநீர் எடுக்க ஆழ்துளை கிணறு அமைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்தது. இது குறித்து தகவல் அறிந்த ஒக்ககுடி, செம்மங்குடி, அணைக்குடி, வீரமாங்குடி மடம் போன்ற கிராம மக்கள் ஒன்றிணைந்து கடந்த ஜனவரி 31-ம் தேதி ஆழ்துளை கிணறு அமைக்கும் இடத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். மேலும் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சை ஸ்மார்ட் சிட்டி உதவி பொறியாளர் போஸ் நேரில் சம்பவ இடத்துக்கு வந்து மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

அப்போது அவரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட பொறியாளர் இது குறித்து கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று ஒக்கக்குடி கொள்ளிடம் ஆற்றில் தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு குடிநீர் கொண்டுசெல்வதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆழ்துளை கிணறு அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இதில் ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொது மக்கள் எதிர்ப்பை மீறி ஆழ்துளை கிணறு அமைக்க பூமிபூஜை நடைபெற்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story