கடத்தி கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவிக்கு டிரைவருடன் காதல் மலர்ந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்


கடத்தி கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவிக்கு டிரைவருடன் காதல் மலர்ந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 3 Aug 2019 12:30 AM GMT (Updated: 2 Aug 2019 11:50 PM GMT)

கடத்தி கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவிக்கு டிரைவருடன் காதல் மலர்ந்தது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கேத்தம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன். ஓட்டல் தொழிலாளி. அவருடைய மனைவி ராஜேஸ்வரி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் இறந்து விட்டார். இந்த தம்பதியின் மகள் முத்தரசி (வயது 19). இவர், வேடசந்தூரை அடுத்த நவாமரத்துப்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 6.3.2016-ந்தேதியன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்ற முத்தரசி திடீரென மாயமாகி விட்டார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் தான், முத்தரசியை கடத்தி சென்று அவரது காதலனே கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

முத்தரசியின் காதலன் பெயர் பரத் (29). இவர், சரக்கு வாகன டிரைவர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ஆத்துக்கால்புதூர் கிராமத்தை சேர்ந்தவர். இந்த கிராமத்தில் தான் முத்தரசியின் பெரியம்மாள் வள்ளியாத்தாள் வசித்து வருகிறார். அங்கு தங்கியிருந்து பிளஸ்-1, பிளஸ்-2 படித்தார் முத்தரசி. அப்போது, பரத்தை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த சந்திப்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. பரத்தின் காதல் வலையில் முத்தரசி விழுந்து விட்டார். 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். பிளஸ்-2 முடித்த பிறகு தனது சொந்த ஊரான கேத்தம்பட்டிக்கு முத்தரசி வந்து விட்டார். தனது தந்தை பாண்டியனுடன் தங்கியிருந்து கல்லூரி படிப்பை தொடர்ந்தார்.

பள்ளிப்பருவத்தில் தொடங்கிய காதல் கல்லூரி காலத்திலும் தொடர்ந்தது. தாராபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை தனது வாகனத்தில் ஏற்றி கொண்டு, ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டுக்கு பரத் வருவது வழக்கம். அப்போது எல்லாம் முத்தரசி ஒட்டன்சத்திரம் வந்து தனது காதலனை சந்தித்து வந்தார்.

இந்த சூழ்நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி முத்தரசியை பரத் கடத்தி சென்று விட்டார். ஆத்துக்கால்புதூருக்கு சென்ற முத்தரசி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பரத்தை வற்புறுத்தினார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பரத், முத்தரசியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பின்னர் தனது தந்தை கனகராஜ், தாயார் லட்சுமி மற்றும் உறவினர்கள் உதவியுடன் வீட்டு வளாகத்தில் உள்ள தோட்டத்தில் குழி தோண்டி முத்தரசியின் உடலை புதைத்து விட்டார்.

வீட்டின் அருகே பிணத்தை புதைப்பது குடும்பத்துக்கு நல்லதல்ல என்று கருதி, முத்தரசியின் உடலை தோண்டி எடுத்து காட்டில் வைத்து எரித்து விட்டனர். அதன் பிறகு தனது உறவினர் பெண்ணை திருமணம் செய்து பரத் வாழ்ந்து வந்தார். வேடசந்தூர் போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட பரபரப்பு தகவல் வெளியானது.

இதனையடுத்து பரத், அவருடைய தாயார் லட்சுமி, உறவினர் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான பரத்தை ஆத்துக்கால்புதூருக்கு வேடசந்தூர் போலீசார் நேற்று அழைத்து சென்றனர். முத்தரசியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவர் போலீசாரிடம் காட்டினார். அங்கு தாராபுரம் போலீசாரும், வருவாய் துறையினரும் இருந்தனர்.

மேலும் கோவையில் இருந்து வந்த மருத்துவ குழுவினர், பரத் கூறிய இடத்தில் தோண்டி பார்த்தனர். அப்போது அங்கு நாயின் எலும்புகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய பரத்தின் தந்தை கனகராஜ், உறவினர்கள் குமாரசாமி, சுப்பிரமணி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.

அவர்களை பிடித்தால் தான் முத்தரசியின் உடலை புதைத்தார்களா? அல்லது எரித்தார்களா? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். அறியாத வயதில் புரியாத புதிராய் முளைத்த பள்ளிப்பருவ காதலால், கல்லூரி மாணவி உயிரை விட்ட சம்பவம் வேடசந்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story