வேலூர் தொகுதிக்கு 5-ந்தேதி வாக்குப்பதிவு:இன்று மாலை முதல் கருத்து கணிப்பு வெளியிட தடை


வேலூர் தொகுதிக்கு 5-ந்தேதி வாக்குப்பதிவு:இன்று மாலை முதல் கருத்து கணிப்பு வெளியிட தடை
x
தினத்தந்தி 3 Aug 2019 7:03 AM IST (Updated: 3 Aug 2019 7:13 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் தொகுதிக்கு 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று (சனிக்கிழமை) மாலை முதல் கருத்து கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வேலூர் தொகுதிக்கு 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று (சனிக்கிழமை) மாலை முதல் கருத்து கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பிறப்பித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு 5-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் பின்வரும் விதிமுறைகள் செயல்பாட்டில் இருக்கும்:-

* தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.

* தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக் காட்சி, ரேடியோ, வாட்ஸ்-அப், முகநூல், டுவிட்டர் போன்றவற்றின் வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக்கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.


* பொதுமக்களை ஈர்க்கிற வகையில், இசை நிகழ்ச்சி அல்லது திரையரங்கச் செயல்பாடு அல்லது பிற கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் தேர்தல் தொடர்பான பிரசாரம் செய்யக்கூடாது. இந்த விதிமுறைகளை மீறினால் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

* தொகுதி வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் இன்று மாலை 6 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

* கல்யாண மண்டபம், சமுதாயக் கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் தங்கியுள்ளனரா? என்பது கண்டறியப்படும்.


* 2 நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரசார அலுவலகம் வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டர்கள் தொலைவில் அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக்கூடாது.

* இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், ஊடகங்களில் காட்சிப்படுத்துவது தடை விதிக்கப்படுகிறது. தேர்தல் நடைபெறும் நாளான 5-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story