வேலூர் தொகுதியில் தி.மு.க. வெற்றியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது மு.க.ஸ்டாலின் பேச்சு


வேலூர் தொகுதியில் தி.மு.க. வெற்றியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 3 Aug 2019 1:42 PM GMT (Updated: 3 Aug 2019 1:59 PM GMT)

‘வேலூர் தொகுதியில் தி.மு.க. வெற்றியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்

வேலூர்,

வேலூர் நாடாளுமன்றதொகுதி தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார். கடைசிநாளான நேற்று காலையில் வேலூர் சத்துவாச்சாரியில் ஆர்.டி.ஓ. அலுவலக சாலையிலும், வேலப்பாடியிலும் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:–

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளராக கதிர்ஆனந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு உங்களை நாடி, தேடி வந்துள்ளேன். 2 கட்டங்களாக 6 நாட்கள் வேலூர் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்குகள் சேகரித்துள்ளேன்.

ஊர்ஊராக சென்று பிரசாரம் செய்துள்ளேன், காலையில் நடைபயணமாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் கேட்டுள்ளேன். கிராமங்களில் திண்ணை பிரசாரம் செய்துள்ளேன். இன்று கடைசிநாள். இங்கு ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் வந்திருக்கிறீர்கள். இது ஒன்றே நம்முடைய வெற்றிக்கு சான்றாகும்.

இந்த தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதமே தேர்தல் நடந்து முடிந்திருக்கவேண்டும். ஆனால் மத்திய பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. ஆட்சியும் இணைந்து, தேர்தலில் எப்படி கூட்டணி வைத்துள்ளார்களோ அதேபோன்று, தேர்தலை ரத்து செய்ய, தள்ளிவைக்க கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு, தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து தேர்தலை தள்ளிவைத்தார்கள்.

தி.மு.க.வின் வெற்றியை தடுக்கவேண்டும் என்பதற்காக, 100 சதவீதம் வெற்றி உறுதி செய்யப்பட்டதால் சூழ்ச்சி செய்து தேர்தலை நிறுத்தினார்கள். அவர்கள் தேர்தலை வேண்டுமானால் தடுத்திருக்கலாம். 5–ந் தேதி நடக்கும் தேர்தலில் தி.மு.க. வெற்றியை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது. பல்வேறு அச்சுறுத்தல்களையும் தாண்டி, அ.தி.மு.க.வின் பொய்யை, மக்கள் தவிடுபொடியாக்கி 38 தொகுதிகளில் வெற்றி தேடித்தந்துள்ளார்கள்.

அதுவும் சாதாரண வெற்றியல்ல. 5½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளோம். அ.தி.மு.க.வின் சூழ்ச்சி, சதி எடுபடவில்லை. நாம் டெல்லிக்கு அனுப்பி உள்ள 38 எம்.பி.க்களுடன் 39–வது எம்.பி.யாக கதிர் ஆனந்தை அனுப்ப வேண்டும். அதற்காக உங்களை நாடி வந்திருக்கிறேன். மத்திய, மாநில அரசுகளுக்கு படிப்பினை வழங்குவதற்கு இந்த தேர்தல் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆட்சி இருக்கிறது. ஆனால் நடக்கவில்லை. காட்சியாகத்தான் இருக்கிறது. அவர்கள் மக்களைபற்றி சிந்திக்காமல், எந்த திட்டத்தில் ஊழல்செய்து பணம் சம்பாதிக்கலாம் என்பது பற்றிதான் சிந்திக்கிறார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு கொண்டுவரும் திட்டங்கள், அதற்கு ஒதுக்கப்படும் நிதி, செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு முறையாக நிதி செலவிடப்பட்டுள்ளதா என்று சி.ஏ.ஜி. என்ற அமைப்பு கணக்கெடுத்து அறிக்கை அளிக்கும்.

அந்த அறிக்கையில், தமிழ்நாட்டுக்கு, கடந்த ஆண்டு மத்திய அரசு ஒதுக்கிய நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு வீடுகட்டி கொடுப்பதற்காக வழங்கப்பட்ட ரூ.2,394 கோடியில் சல்லிக்காசுக்கூட செலவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதேபோன்று 100 நாள் வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.247 கோடியும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்காக வழங்கப்பட்ட ரூ.100 கோடியில் 3 கோடி ரூபாய் மட்டும் செலவு செய்யப்பட்டு ரூ.97 கோடி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

மகளிர் குழுக்களுக்கு சுழல்நிதி, வங்கி கடன் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.23.84 கோடியும் செலவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இப்படி மொத்தம் ரூ.3,677 கோடி பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதனால்தான் எடப்பாடி பழனிசாமி அரசை கையாலாகாத ஆட்சி என்கிறேன்.

அவர் பிரசாரத்திற்கு செல்லும் இடத்தில் எல்லாம் நான் விவசாயி, நான் விவசாயி என்கிறார். ரவுடிதான் நானும் ரவுடி, நானும் ரவுடி என்பான். நானும் எம்.ஜி.ஆர். ரசிகன்தான். அவர் நடித்த விவசாயி சினிமா படத்தை 7 முறை பார்த்துள்ளேன். அதற்காக நானும் விவசாயிதான் என்று சொல்லமுடியுமா?. சேலம்–சென்னை 8 வழிச்சாலை திட்டம் தவறு என்று சொல்லவில்லை. இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். சென்னை ஐகோர்ட்டும் தடைவிதித்துள்ளது. அதை உடைக்க உச்சநீதி மன்றத்தில் அப்பீலுக்கு சென்றுள்ளார்கள். என்ன காரணம்?.

எடப்பாடி பழனிசாமி சம்பந்தியின் உறவினர் செய்யாத்துரைக்கு ஒப்பந்தம் கொடுத்து கமி‌ஷன் பெறப்பட்டு விட்டது. அதனால் திட்டத்தை நிறைவேற்ற துடிக்கிறார். டெல்டா விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களை கண்டுகொள்ளவில்லை. பிறகு எப்படி எடப்பாடி பழனிசாமியை விவசாயி என்று கூறமுடியும். 100 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். அதுபற்றி வாய் திறந்தாரா?. விவசாயி என்றுசொல்ல அவருக்கு என்ன அருகதை இருகிறது.

நான் தேர்தலுக்காக மட்டும் வரவில்லை, எப்போதும் உங்களுடன்தான் இருப்பேன். தேர்தலுக்கு பிறகு 9–ந்தேதி வெற்றிபெற்று நன்றி சொல்ல வருவேன். அதுமட்டுமல்ல. கொடுத்துள்ள வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறதா என்று கண்காணிக்கவும் வருவேன். இதுதான் தி.மு.க.

எந்த சூழ்நிலையிலும் உங்களுக்காக உழைக்கும் இயக்கம் தி.மு.க. ஆட்சியில் இல்லாவிட்டாலும் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் உங்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம். அதையும் தாண்டி 12,500 கிராமங்களுக்கு சென்று கிராமசபை நடத்தி மக்கள்குறை கேட்டுள்ளோம். உங்களுக்காக போராட்டம், மறியல், ஆர்ப்பாட்டம், கண்டன கூட்டம், ஏன் சிறைக்கு செல்லும் அளவுக்கு போராட்டம் நடத்தி இருக்கிறோம்.

தொடர்ந்து உங்களுக்காக குரல்கொடுக்க கதிர்ஆனந்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெறச்செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார். அப்போது வேட்பாளர் கதிர்ஆனத் உடனிருந்தார்.

பின்னர் நேதாஜி மார்க்கெட்டுக்கு சென்று வியாபாரிகள், பொதுமக்களிடம் மு.க.ஸ்டாலின் வாக்குகள் சேகரித்தார்.


Next Story